கும்மிடிப்பூண்டி அருகே ரசாயனம் கலந்த நீரை பருகி 3 மாடுகள் உயிரிழப்பு

 

கும்மிடிப்பூண்டி, டிச. 9: கும்மிடிப்பூண்டி அருகே ரசாயனம் கலந்த நீரை பருகியதில் 3 மாடுகள் உயிரிழந்தன. கும்மிடிப்பூண்டி அடுத்த ஜி.ஆர்.கண்டிகை ஊராட்சியில் சூளாவளி கண்டிகை, பில்லா குப்பம் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று தினந்தோறும் ரசாயனம் கலந்த நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கோபி, சந்திரய்யா, முருகேசன் ஆகியோருக்குச் சொந்தமான மாடுகள் நேற்று முன்தினம் வழக்கம்போல் மேய்ச்சலுக்காக அங்கு விடப்பட்டது. மாலையில் நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது ரசாயன தொழிற்சாலையையொட்டி 3 மாடுகளும் வாயில் நுரையுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கால்நடை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

அதன்படி அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மாடுகளை பரிசோதனை செய்ததில் நச்சு கலந்த ரசாயன நீரை உட்கொண்டதால் அவை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடனடியாக ரசாயனக் கழிவு நீர் வெளியிடுவதை தடுக்குமாறும் புகார் மனு அளித்தனர். அதன்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே ரசாயனம் கலந்த நீரை பருகி 3 மாடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: