பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி பரவியதால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய வாகன ஓட்டிகள்

திருவள்ளூர், மார்ச் 13: திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரவியதால், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நடைபெற்று வருவதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.

வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த 3 நாட்களாக தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்று நாடு முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இருப்பினும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்கின்ற அச்சத்தில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காஸ் முன்பதிவு செய்தும், காஸ் குடோன்களில் சிலிண்டர்களை பெற குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக காஸ் குடோன்களில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு சிலிண்டர்களை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என திடீரென வதந்தி பரவியது. இந்த, வதந்தியை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக, ஒரே சமயத்தில் திரண்டதால் திருவள்ளூரில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருவள்ளூரில் சில பங்குகளில் பெட்ரோல் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது. அதேபோல, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த பீதியின் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பு பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம் என நினைத்து பெட்ரோல் பங்குகளுக்கு படை எடுத்தனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகமானதால் பரபரப்பு நிலவியது.

Related Stories: