ஆவடி, மார்ச் 13: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐகள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இரண்டு முறை பணியிட மாற்றம் கேட்டு விருப்பம் மனு அளித்தனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்படும் என போலீசார் காத்திருந்தனர். ஆனால், புதிய காவல் ஆணையர் மாற்றம், பண்டிகை காலம் போன்ற காரணங்களால் பணியிட மாற்றம் தள்ளிப்போனது.
அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பணியிட மாற்றம் செய்யாதது மேற்படி போலீசாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தங்கள் வீட்டில் இருந்து பல கி.மீ., தூரம் சென்று பணிபுரிந்து வருகின்றனர். குடும்ப சூழல், உடல்நிலை பிரச்னை போன்றவற்றால் சில காவலர்கள் பணியிட மாற்றம் கேட்டு விருப்ப மனு அளித்தும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, தேர்தல் பணியில் குளறுபடி, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்க சிறப்பு எஸ்ஐகள், காவலர்கள் அளித்த பணியிடமாற்ற விருப்ப மனுக்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீசாரிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘தேர்தல் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்த பின், பட்டியலில் உள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்’ என்றார்.
