திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் கிடந்த மர்ம பெட்டியால் பீதி

திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் அருகே சாலையின் நடப்பாதையில் கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி ஒன்று கிடந்தது. இதனைப் பார்த்த சிலர், வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மர்ம பெட்டியை தொடாமல் சிறிது நேரம் சுற்றி, சுற்றி பார்த்தனர். இதனையடுத்து தடயவியல் நிபுணரை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்பதால், போலீசார் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து போலீசார், அந்த மர்ம பெட்டி குறித்து விசாரணை நடத்தியதில், அந்த மர்ம பெட்டி ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும் பெட்டி என்பது தெரியவந்தது. இந்நிலையில், கொள்ளையர்கள் யாராவது ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்து விட்டு, இந்த பெட்டியை இங்கு வீசிவிட்டு சென்று உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து போலீசார், அந்த பெட்டியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: