பேரவை தேர்தலுக்கு முன் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பாஜவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக இருந்தனர். சிவசேனா தலைவர் ஷிண்டே தலைமையில் தான் பாஜ கூட்டணி தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தலில் பாஜ கட்சிக்கு அதிகளவு இடங்கள் கிடைத்ததால் அந்த கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ்க்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று பாஜ அழுத்தம் கொடுத்தது. இதனால்,ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அடைந்து தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். பின்னர் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி துணை முதல்வர் பதவி கொடுத்து பாஜ சமாளித்துள்ளது.
அடுத்த ஆண்டு பீகாரில் சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. பீகாரில் நிதிஷ்குமார் நீண்ட காலம் முதல்வராக இருக்கிறார். அந்த மாநில சட்ட பேரவையில் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியை விட பாஜவுக்கு அதிக எம்எல்ஏக்கள் உள்ளனர். வரும் தேர்தலில் மகாராஷ்டிராவை போன்ற பரிசோதனையை பாஜ பீகாரில் மேற்கொண்டால் தான் பதவியை இழக்க நேரிடும் என்று நிதிஷ்குமார் கவலைப்படுவதாக கூறப்படுகிறது. ஜேடியு கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,‘‘நிதிஷ்குமாருக்கு அதிகார பசி இல்லை. 2020 பேரவை தேர்தலில் அவர் முதல்வர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால், பாஜ தலைவர்கள் நிர்பந்தித்ததால் அவர் முதல்வராக பொறுப்பேற்றார்’’ என்றார்.
அந்த கட்சியின் இன்னொரு தலைவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் மாற்றங்களால் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் மகாராஷ்டிரா நிலைமை வேறு, பீகார் நிலைமை வேறு. நீங்கள் நிதிஷ் குமாரை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் அவரை யாரும் புறக்கணிக்க முடியாது,‘‘என்றார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார்,‘‘ தேஜ மற்றும் இந்தியா கூட்டணிகள் நிதிஷின் அரசியல் பலத்தை அங்கீகரிக்கின்றன’’ என்றார்.
The post ஷிண்டேவுக்கு பதில் பட்நவிஸ் முதல்வர் மகாராஷ்டிரா மாடல் பீகாரில் அமலாகுமா?முதல்வர் நிதிஷ்குமார் அச்சம் appeared first on Dinakaran.