பாஜவில் பதவி கிடைக்காததால் சரத்குமார் `அதிருப்தி’: கட்சி மாற திட்டமா?

நெல்லை: தொடக்க காலத்தில் திமுகவில் இருந்த நடிகர் சரத்குமார், பின்னர் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்ட அவர், கடந்த 2011ம் ஆண்டில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். கடந்த 2016ம் ஆண்டில் மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாமல் திண்டாடிய சரத்குமார், ஒரேநாள் இரவில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜவோடு இணைத்தார்.

தனக்கும், தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும் பாஜவில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இதுநாள் வரை கிட்டவில்லை. இதனால், சரத்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பழைய சமக நிர்வாகிகளும், தொண்டர்களும் வேறு கட்சிக்கு செல்லலாம் என அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிது. இந்நிலையில் சமீபத்திய முகநூல் பதிவில், அவர் தனது ஆற்றாமையை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு பதவி ஏதும் கிடைக்காவிட்டாலும், தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக பாஜ கட்சிப் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளில் பொறுப்புகள் வழங்கப்படாத சூழ்நிலையிலும், என்னுடன் சோர்வடையாமல் பயணிக்கும் நிர்வாகிகள் பலமுறை எனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று எண்ணி வருத்தப்பட்டாலும், “பொறுத்தார் பூமியாள்வார்’’ என்ற பழமொழிக்கேற்ப இவற்றையெல்லாம் “இதுவும் கடந்து போகும்’’ என்ற அடிப்படையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை இலக்காக கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் தனக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பதை அவர் சுட்டி காட்டியுள்ளார். இந்நிலையில் அவர் திமுகவில் சேர தூது விட்டார் என்றும் அந்த தரப்பில் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Stories: