*அரசு மருத்துவர்கள் அகற்றி சாதனை
சேலம் : சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசியை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றி சாதனை படைத்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவரது மகன் செல்வம் (13). கடந்த 26ம் தேதி எதிர்பாராத விதமாக குண்டூசியை விழுங்கி உள்ளான்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, வலது நுரையீரல் மூச்சுக்குழாயில் குண்டூசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனையின் டீன் தேவிமீனாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் பேராசிரியர் கிருஷ்ணசுந்தரி தலைமையில் மயக்கவியல், கதிரியக்கவியல், இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழு உதவியுடன் நவீன டெலிப்ரான்கோஸ்கோப் கருவி மூலம் மூன்று செண்டிமீட்டர் அளவுள்ள குண்டூசி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இந்த மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறுவயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நிலக்கடலை, விதைகள், பிளாஸ்டிக் விசில், கூரிய ஊசிகள் மற்றும் ஊக்குகள் போன்றவற்றை விழுங்கி தொண்டை பகுதியில் மாட்டிக்கொண்டதாக வருகின்றனர். மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளும் போது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையும் காணப்படுகிறது.
குழந்தைகள் இதுபோன்ற பொருளை சாப்பிட்டுவிட்டால் பெற்றோர்கள் பயம், பதட்டம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஆர்எம்ஓ ஸ்ரீலதா, காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் கிருஷ்ணசுந்தரி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
தனியாரில் ₹1 லட்சம் செலவிட வேண்டும்
இதுகுறித்து பேராசிரியர் கிருஷ்ணசுந்தரி கூறுகையில், “குண்டூசி விழுங்கி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலில் முழு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில் வலது நுரையீரலின் மூச்சுக்குழாயில் குண்டூசி இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு டெலிப்ரான்கோஸ்கோப் கருவி செலுத்தி எந்த பாதிப்பும் இல்லாமல் குண்டூசியை வெற்றிகரமாக அகற்றினோம். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெறும் போது ₹1 லட்சம் வரை செலவாகும். இந்த மருத்துவ சிகிச்சையில் 15 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டோம்,’’என்றார்.
விழிப்புணர்வு அவசியம்
பெரும்பாலும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளே பிளாஸ்டிக், நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களை தவறுதலாக விழுங்கி விடுகின்றனர். எனவே, நுண்ணிய கூர்மையான ஆணிகள், குண்டூசிகள், விதைகள், பிளாஸ்டிக் விசில், ஊக்கு போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் பெற்றோர்கள் வைக்க வேண்டும். அதேபோல், சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் மர்ம பொருளை விழுங்கியது தெரியவந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற வேண்டும். காலதாமதம் ஏற்படும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பது மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.
The post சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசி appeared first on Dinakaran.