கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன? காத்திருக்கும் சவால்கள்

மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி. மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி இந்த முறையும் தொடரும் என நம்பியிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இதில், உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது. உத்தவ் கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் அதிகாரத்தில் இருந்தபோதே பாஜவால் கட்சி உடைக்கப்பட்டு விட்டது. கட்சி பெயரும், சின்னமும் பறிபோய் விட்டது. அதே போல் தான் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும். ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவாரிடம் கட்சி மற்றும் சின்னத்தை பறிகொடுத்துவிட்டு தற்போது ஏறக்குறைய நிராயுத பாணியாக நிற்கிறார்கள் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவார்.

இவர்கள் இருவருக்கும் உள்ள திரண்ட அனுதாப அலையை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என நம்பி இவர்களிடம் சேர்ந்தவர்கள் இனி நிலைப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். இந்துத்துவாவை கைவிட்டு விட்டார் , பால்தாக்கரே கொள்கைகளை புறக்கணித்து விட்டார் என்பதுதான் உத்தவ் மீது பாஜ கூட்டணி தொடர்ந்து வைத்த குற்றச்சாட்டு. பாஜ பிரசாரம் முழுவதும் இந்துத்துவாவை மையப்படுத்தியே இருந்தன. சரத்பவாரும் அதே போல் தான் பாராமதி தொகுதியில் அஜித்பவாரை எதிர்த்து உறவினரை நிறுத்தினார். அங்கும் தோல்விதான் கிடைத்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் கட்சியை வளர்ப்பதும், கட்டுக்கோப்பாக வைப்பதும், விசுவாசிகளாக இருந்த தலைவர்களை தொடர்ந்து தக்க வைப்பதும் இருவருக்கும் முன்பு உள்ள பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

* பாஜவின் ஹாட்ரிக் சாதனை
மகாராஷ்டிராவில் கடந்த 2014ம் ஆண்டு பாஜ தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. தேவேந்திர பட்நவிஸ் முதல்வராக இருந்தார். 2019ம் ஆண்டிலும் பாஜ சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவிக்காக ஏற்பட்ட மோதலில், பதவியை பாஜ விட்டுத்தராததால் உத்தவ் கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்வரானரார். இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவில் சேர்ந்தார். இதன் மூலம் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தது. தற்போது 3வது முறையாக பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் பாஜ ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இதுபோல், அரியானா மாநிலத்திலும் 2014ம் ஆண்டு, 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும், தொடர்ந்து, கடந்த அக்டோபர் 17ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.

* தாராவியில் மறுசீரமைப்பு அதானி வசம் தொடரும்
மகாாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி உலகிலேயே மிக பெரிய குடிசை பகுதியாகும். தாராவி குடிசை பகுதியில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். தாராவியை மேம்படுத்துவதற்கு கடந்த 1950ம் ஆண்டு முதல் பல்வேறு அரசுகள் முயற்சித்து வந்தன. ஆனால் எதுவுமே துவங்கப்படாமல் பாதியிலேயே நின்றுவிட்டன. மகாராஷ்டிரா பாஜ அரசு கடந்த 2022 ம் ஆண்டு விடப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான டெண்டரை அதானி நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.25,000 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவிருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை ரத்து செய்து, அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்களை திரும்ப பெறுவோம் என முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்திருந்தார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக உள்ள அதானியிடம் இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டது பற்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான சட்ட பேரவை தேர்தலில் ஆளும் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது இந்த திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

* இன்ஸ்டாவில் 56 லட்சம் பாலேயர்கள் இருந்தும் 155 ஓட்டு மட்டுமே கிடைத்தது
மகாராஷ்டிராவின் வெர்சோவா தொகுதியில் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி (கன்சி ராம்) சார்பில் அஜாஸ் கான் போட்டியிட்டார். பிக் பாஸ் புகழ் நடிகரான இவர் அரசியலிலும் அவ்வப்போது தலைகாட்டுபவர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இதனால் இம்முறை சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இத்தொகுதியில் நோட்டோ கூட 1,298 வாக்குகள் பெற்றது. ஏற்கனவே 2024 மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிட்ட அஜாஸ்கான் அப்போதும் படுதோல்வி அடைந்தார். இதனால் சமூக ஊடக ஆதரவுகள் எதுவும் தேர்தல் களத்தில் வெற்றி அடையாது என மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.

* மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒப்பீடு
மகாராஷ்டிராவில் 2024 மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் மகாவிகாஸ் அகாடி (இந்தியா கூட்டணி) மற்றும் மகாயுதி கூட்டணிகளின் (தேசிய ஜனநாயக கூட்டணி) முக்கிய கட்சிகள் வென்ற ஓட்டுகள் மற்றும் ஓட்டு சதவீதங்களின் ஒப்பீடு:
மக்களவை தேர்தல் 2024
மொத்த இடங்கள் – 48
இந்தியா கூட்டணி (வெற்றி – 30)
கட்சி ஓட்டு சதவீதம்
காங்கிரஸ் 96,41,856 16.92%
உத்தவ் சிவசேனா 95,22,797 16.52%
சரத்பவார் என்சிபி 58,51,166 10.27%
மொத்தம் 2,50,15,819 43.71%
தேசிய ஜனநாயக கூட்டணி (வெற்றி – 17)
பாஜ 1,49,13,914 26.18%
சிவசேனா 73,77,674 12.95%
என்சிபி 20,53,757 3.60%
ஆர்எஸ்பி 4,67,282 0.82%
மொத்தம் 2,48,12,627 43.55%
சட்டப்பேரவை தேர்தல் 2024
மொத்த இடங்கள் – 288
மகாவிகாஸ் அகாடி கூட்டணி (வெற்றி – 48)
காங்கிரஸ் 80,15,166 12.41%
உத்தவ் சிவசேனா 64,33,013 9.96%
சரத்பவார் என்சிபி 72,87,797 11.29%
மொத்தம் 2,17,35,976 33.66%
மகாயுதி கூட்டணி (வெற்றி – 236)
பாஜ 1,72,89,350 26.77%
சிவசேனா 79,95,562 12.38%
என்சிபி 58,16,566 9.01%
மொத்தம் 3,11,01,478 48.16%

* குமாரசாமி, பொம்மை மகன்கள் படுதோல்வி
கர்நாடக மாநிலத்தில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, ஷிக்காவி மற்றும் சண்டூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்று தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஷிக்காவி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசீர் அகமது கான் 13 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் முன்னாள் முதல்வரும் ஒன்றிய அமைச்சருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில்கவுடா, சென்னபட்டனா தொகுதியிலும் மற்றும் ஷிக்காவி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தற்போதைய ஹாவேரி தொகுதி எம்பியுமான பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையும் தோல்வி அடைந்தனர். சென்னபட்டணா தொகுதி கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்ப வசத்தில் இருந்தது. தற்போது அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை பிறந்த மண் ஷிக்காவி. இத்தொகுதியை கடந்த 17 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

The post கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன? காத்திருக்கும் சவால்கள் appeared first on Dinakaran.

Related Stories: