சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜை ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது

திருவனந்தபுரம்: சபரிமலையில் 27ம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து உள்ளது. வரும் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.

மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கமாகும். 420 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கி திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராமவர்மா கடந்த 1973ம் ஆண்டு சபரிமலைக்கு காணிக்கையாக வழங்கினார். பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இந்த தங்க அங்கி வைக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக இங்கிருந்துதான் வருடம்தோறும் இந்த தங்க அங்கி சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த வருட மண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலை 7 மணியளவில் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். 26ம் தேதி மாலை சன்னிதானத்தை அடையும்.

இந்த தங்க அங்கி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். மறுநாள் காலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

* 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்
சபரிமலையில் இந்த வருடம் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியது. நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த வருடம் இதே நாளில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரவணை விற்பனையில் கட்டுப்பாடு சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அரவணை பிரசாத விற்பனையில் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் ஒரு பக்தருக்கு அதிகபட்சமாக 10 டின் மட்டுமே அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: