புதுடெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளில் 2026 முதல் சரிபார்ப்புக்காக முக அங்கீகார முறையை அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது. மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, தேர்வர்கள் நேரலையாகப் புகைப்படம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியிலும் அந்த முகமை ஈடுபட்டுள்ளது.
2025 நீட் தேர்வின் போது, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது குறித்த ஒரு சாத்தியக்கூறு சோதனையை தேசிய தேர்வு முகமை வெற்றிகரமாக நடத்தியது. இந்தச் சோதனை, தேர்வர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கும் ஒரு வழியாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தின் சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தச் சோதனையின் போது, ஆதார் முக அங்கீகாரத் தொழில்நுட்பம் டெல்லியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நீட் மையங்களில் பயன்படுத்தப்பட்டது, மேலும் இது என்ஐசி-யின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் என்டிஏ-வின் தேர்வு நெறிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய நுழைவுத் தேர்வுகளில் இது அறிமுகப்படுத்தப்படும். முறைகேடுகள் செய்வதை தடுப்பதை உறுதி செய்வதற்காக, லைவ் புகைப்படம் எடுக்கும் வசதியும் விண்ணப்ப முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ெதாிவிக்கப்பட்டுள்ளது.
* முக பயோமெட்ரிக் சரிபார்ப்பு என்பது, கண்களுக்கு இடையிலான தூரம் அல்லது மூக்கின் வடிவம் போன்ற தனித்துவமான முக அம்சங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. இது சேமிக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடுவதற்காக ஒரு டிஜிட்டல் டெம்ப்ளேட்டை உருவாக்குகிறது, பெரும்பாலும் பகுப்பாய்விற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
* ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, ஆன்லைன் விண்ணப்பம் அல்லது தேர்வு செயல்முறைகளின் போது வெப்கேம் அல்லது தொலைபேசி வழியாக நிகழ்நேர(லைவ்) புகைப்படம் எடுக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.
* கேள்வித்தாள் கசிவு சம்பவங்களைத் தொடர்ந்து ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழு இந்த பரிந்துரைகளை வழங்கியது.
