புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருந்தவர் குல்தீப் செங்கார். இவர் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து பாஜ கட்சியில் சேர்ந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது தந்தை போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திலும் செங்கார் உடந்தையாக இருந்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் செங்கருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிறுமியின் தந்தை லாக்கப் மரணத்தில் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தனது தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் செங்கர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத், ஹரிஷ் வைத்யநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், செங்கருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு ரூ.15 லட்சம் தனிநபர் பிணைப் பத்திரம், அதே தொகைக்கான 3 நபர்களின் உத்தரவாதத்துடன் ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இதில், செங்கர் பாதிக்கப்பட்ட பெண்ணின் டெல்லியில் உள்ள வசிப்பிடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவிற்குள் வரக்கூடாது, பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது தாயாரையும் அச்சுறுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே இந்த தொடக்கத்தில் கண்புரை அறுவைசிகிச்சைக்காக செங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
