சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8.9% அதிகம். இந்நிலையில், சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை மற்றும் கணக்குழு சார்பில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 2024-25ம் ஆண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் கடந்தாண்டை விட 20.12 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 14 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா 13.46 சதவீதமும், கர்நாடகா 10 சதவீதமும் மாநில ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தமிழக வணிகவரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் தமிழகம் வளர்ச்சி பெற்றதன் முதன்மை காரணம் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தான். கடந்த 2022 டிசம்பர் 30ம் தேதி வணிகவரித்துறை சார்பில் வருவாய் இழப்பின் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கான பிரிவு தொடங்கப்பட்டு, அதன் மதிப்பாய்வு மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள சிக்கல்களை அரசு வரிசைப்படுத்தி சரி செய்தது.
மேலும், ஐஜிஎஸ்டி இருக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதால் கூடுதல் வருவாயை ஈட்டமுடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். ஜிஎஸ்டி வசூலில் மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதில்லை என மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனவே, 50 சதவீத வரி பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டிக்கு அதிக வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது குறிப்பிடத்தக்கது.
சிஏஜி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியல்
மாநிலம் 2024-25ம் ஆண்டின் (முதல் பாதி) 2023-24ம் ஆண்டின் (முதல் பாதி) வளர்ச்சி
தமிழ்நாடு 35,414 கோடி 29,481 கோடி 20.12%
மகாராஷ்டிரா 78,179 கோடி 68,899 கோடி 13.46%
குஜராத் 31,903 கோடி 27,976 கோடி 14.03%
உத்தரபிரதேசம் 74,230 கோடி 64,909 கோடி 14.35%
கர்நாடகா 44,096 கோடி 39,840 கோடி 10.68%
The post 2024-25ம் நிதியாண்டின் முதல் பாதியில் மாநில ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு முதலிடம்: கடந்தாண்டை விட 20.12% அதிகரிப்பு; சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.