கார்த்திகை மாதப்பிறப்பு; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

 


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல நேற்று அதிகாலை 5.40மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 3.33மணி வரை உகந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. விடியவிடிய கிரிவலம் வந்த பக்தர்கள் இன்று காலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே 16கால் மண்டபம் முன்பு தங்களது கிரிவலத்தை முடித்தனர்.

இன்று வார விடுமுறை நாள் மற்றும் கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்றும் வழக்கம்போல் அமர்வு தரிசனம், சிறப்பு கட்டண தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பொதுதரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் 1கி.மீ. தூரத்திற்கு தேரடி வீதி வரை வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 5மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிரிவலம் முடித்த பக்தர்கள் சிரமமின்றி தங்களது ஊர்களுக்கு பயணம் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து சென்னை, வேலூர், விழுப்புரம் வழியாக செல்லும் ரயிலில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ரயிலில் இடம் பிடிக்க ஒருவரையொருவர் முண்டியடித்து ஏறினர். ரயிலில் இடம் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் தவித்தனர். பக்தர்களின் வசதிக்காக பவுர்ணமியொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயிலில்கள் கூடுதல் பெட்டிகளை இணைந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கார்த்திகை மாதப்பிறப்பு; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: 5 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: