ஜெயங்கொண்டம்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம் நடை பெறுவதையொட்டி 100 மூட்டை அரிசி சாதனம் சாற்றி சிறப்பு வழிப்பாடு நடக்கிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். கோயிலில் உள்ள பதிமூன்றரை அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட லிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் 5 நீராவி கொதிகலன்களை கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்படும். அவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும் என்பதும், கோடிக்கணக்கான லிங்கத்தை பக்தர்கள் ஒரே நேரத்தில் நேரில் தரிசிப்பதாக ஐதீகம்.
இந்தநிலையில் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இந்தாண்டு ஐப்பசி மாத அன்னாபிஷேகம் நாளை (15ம் தேதி) நடக்கிறது. காலை 9 மணி முதல் லிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் 5 நீராவி கொதிகலன்களை கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு லிங்கத்தின் மேல் உள்ள சாதங்கள் பக்தர்களுக்கு உணவாக வழங்கப்படும். பக்தர்களுக்கு வழங்கியதுபோக மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். அன்னாபிஷேக தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர். இதையொட்டி கோயில் வளாகத்தில் பந்தல், மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
The post கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்: 100 மூட்டை அரிசி சாதம் சாற்றி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.