திருத்தணி, நவ.6: கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் சாமியை தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழா நடந்து வருகிறது. தினமும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. சண்முகருக்கு தொடர்ந்து லட்சார்ச்சனை பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் 4ம் நாளான நேற்று காலை மூலவருக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், அவரது குடும்பத்தினருடன் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்தார். அவருக்கு கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிறகு கோயில் சார்பில் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, திரைப்பட காமெடி நடிகர் தம்பி ராமையா, ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். மூலவர், உற்சவர் மற்றும் காவடி மண்டபத்தில் சண்முகரை தரிசித்து வழிபட்டனர். அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள பக்தர்கள் ஆர்வம் காட்டினர். கோயில் சார்பில் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு கோயில் விபூதி, பிரசாதம் வழங்கப்பட்டது. காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தன. முருக பக்தர்கள் மாலை அணிந்து சஷ்டி விரதம் இருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் திருத்தணி முருகன் கோயிலில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நாளை மாலை கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
The post கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம் appeared first on Dinakaran.