செங்குன்றம் அருகே பரபரப்பு பெயின்ட் மூலப்பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

புழல், மார்ச் 3: செங்குன்றம் அருகே தனியார் பெயின்ட் மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன், விளாங்காடுப்பாக்கம், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் ஏராளமான தனியார் கிடங்குகள் உள்ளன. கிராண்ட்லைன் கரிகால நகர், சோழன் சாலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான பெயின்ட் மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து, பெயின்ட் தயாரிக்கும் மூலப் பொருட்களின் பேரல்கள் வெடித்து சிதறியதால், அப்பகுதி வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறி, இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேர போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக, கிடங்கின் அருகே அமைந்துள்ள வீடுகளின் சுவர், வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள், பக்கவாட்டு சுவர், தண்ணீர் தொட்டி என பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், பெயின்ட் மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக வீடுகளில் இருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடியதாகவும், தீ விபத்தை விவரிக்க முடியாதபடி படபடப்பாக உள்ளதாகவும் தெரிவித்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே பெயின்ட், தின்னர் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு இயங்கி வருவது ஆபத்தை விளைவிக்கும் என்றும், அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: