புனே: தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பதாகவும், மீண்டும் எம்பி ஆகப்போவதில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் கூறினார். பாராமதி தொகுதி சிட்டிங் எம்எல்ஏவும் துணை முதல்வருமான அஜித்பவார் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அஜித்பவாரை எதிர்த்து சரத்பவார் கட்சி சார்பில், அவரது உறவினரான யுகேந்திர பவார் களமிறக்கப்பட்டுள்ளார். யுகேந்திராவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சரத்பவார் நேற்று ஷிர்சுபாலில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: தற்போது பாராமதி தொகுதி இருக்கும் மேற்கு மகாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அஜித் பவார் கவனம் செலுத்தவில்லை. நான் மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது, பாராமதியில் ஜனாய் ஷிர்சாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தேன். இந்த பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு அடுத்த தலைமைக்கு (அஜித் பவார்) வழங்கப்பட்டது, ஆனால், பணியை அவர் முடிக்கவில்லை.
இந்த பணிகளை முழுமையாக நிறைவேற்ற புதிய தலைமை தேவை. இப்போதைக்கு ஒரே ஒரு உறுதியைத்தான் தர முடியும். ஏனெனில் நான் ஆட்சியில் இல்லை மாநிலங்களவை எம்பியாகத்தான் இருக்கிறேன். எனது எம்.பி பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. அதன்பிறகு, மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதா என்பது குறித்து நான் முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும், நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டு விட்டேன். அதனால்தான் புதிய தலைமையை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் . அதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டேன், இருப்பினும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காகவும் பாடுபடுவேன். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
The post மீண்டும் எம்பி ஆக மாட்டேன் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு: சரத்பவார் அதிரடி முடிவு appeared first on Dinakaran.