கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? கி.வீரமணி கண்டனம்

சென்னை: கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் பக்கத்தில் கூறியதாவது, “பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்துகொண்டு, இந்திய நீதித்துறைக்கே சவால்விடும் நித்தியானந்தா என்ற ஒரு மோசடிப் பேர்வழி, ‘தான் பெரிய கடவுள் அவதாரம்’ என்றும், ‘தனக்கென்று தனி ராஜ்ஜியம் – ‘கைலாசம்’ என்ற ஒரு நாட்டின் அதிபர் தான்’ என்றும், ‘மற்றவர்களுக்கும் ‘விசா’ வழங்குவேன்’ என்றும் தான்தோன்றித்தனமாக நாளும் உளறி, பல இளம்பெண்களையும் மயக்கி, பல வகையில் சொத்து சேர்த்தும் திடீரென்று தொலைக்காட்சிகளில் தோன்றி, அரசுகளுக்கும், நீதித் துறைக்கும் ‘டிமிக்கி’ கொடுத்து வாழ்வதை எப்படி அரசுகள் பொறுத்துக் கொண்டுள்ளன‘‘ என்ற நீதிமன்றங்களின் கேள்வி பொருள் பொதிந்த ஒன்றாகும்.

கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்!

முன்பு அப்படிப்பட்ட மோசடி, கிரிமினல் தண்டனை பெற்று சிறைக்குள் இருந்த புதுக்கோட்டை புரூடா சாமியார், அற்புதங்களை விளைவிப்பதாக விளையாட்டுகள் பிறகு சிறையிலே பல ஆண்டுகாலம் இருந்ததைப்போல, இந்த ஆசாமியும் வாழ்நாள் சிறையிலே ‘‘தவம்‘‘ செய்யவேண்டிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாவான். காலம் துரத்திடுவது உறுதி. இப்பேர்வழியின் சொத்துகளை அரசு பாதுகாக்கவேண்டுமா? என்ற நியாயமான கேள்வியை, உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி அவர்கள் எழுப்பியுள்ளார். வரவேற்கத்தக்க நியாயமான கேள்வியாகும் இது! நீதி, நிர்வாக, ஆட்சித் துறைகளுக்கே இப்பேர்வழிகளின் ‘‘வித்தைகளும், ஆணவம் கலந்த கொழுப்புப் பேச்சுகளும்‘‘ அந்த அமைப்புகளின் விழுமியங்களையே கீழிறக்கத்திற்குக் கொண்டுவரக் கூடிய தகாத, ஏன் அருவருக்கத்தக்க செயல்களாகும், கண்டனத்திற்குரியதாகும்! அதுபோலவே, கோவையில் பல வகையில் ‘ஈஷா மய்யம்’ என்ற பெயரில் – அங்கே மகளிர் கொடுமையை, அனுபவிக்க, அவர்களது பெற்றோர், உற்றார்களின் கதறல்களையும், ரத்தக் கண்ணீர் ஓடுவதையும் நாடு கண்டுகொண்டது. இதற்குப் ‘‘பெரிய இடத்து மனிதர்கள்’’ அங்கே சென்று அவர்களின் ஆசிகளைப் பெற்று வருவதால், அதிதீவிர அறியாமை அதிகாரச் செயல்பாடுகள் நாகரிக உலகத்தைத் தலைகுனிந்து, முகம் சுளிக்க வைக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது! இந்த நித்தியானந்தா என்பவரின் பூர்வ வரலாறு தெரிந்தவர்கள் பலரும் திருவண்ணாமலை மற்றும் வேறு பல ஊர்களிலும் இருக்கவே செய்கிறார்கள்.

மதுரை ஆதீனம்கூட மோசடி நித்தியானந்தாவிடம் ஏமாந்தது உண்டு!

மறைந்த பழைய மதுரை ஆதீனமும் இந்த மோசடிப் பேர்வழியிடம் ஏமாந்து, பிறகு ஒருவகையாக கரை சேர்ந்து மீண்ட கதை நாடறிந்த ஒன்றாகும்! கருநாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்தியானந்தாவின் சீடரான சுரேகா தாக்கல் செய்த மனுவில், ‘‘கணேசன் என்பவருக்குச் சொந்தமான விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின்பேரில், அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில், என்மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர்மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும், இந்த வழக்கில் தங்களுக்கு முன்பிணை வழங்கவேண்டுமென்றும்’’ அம்மனுவில் கூறியுள்ளார். இந்த மனுமீதான விசாரணை நேற்று (22.10.2024) நீதிபதி பரதசக்கரவர்த்திமுன் நடைபெற்றபோது, மனுதாரருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்று புகார் கொடுத்தவர் தரப்பு இடையீட்டு மனுதாக்கல் செய்தது – கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது மனுதாரர்கள் தரப்பு.

மோசடிப் பேர்வழிகளின் சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ளலாம்!

நீதிபதி கூறுகையில்,‘‘நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித் துறைக்கே சவால் விடுகிறார்! அவருக்கு எதிராக பல வழக்குகளில் ‘பிடிவாரண்ட்‘ உள்ளது. இவரது சொத்துகளுக்குப் பாதுகாப்புத் தருவது உகந்ததா? என்ற பொருத்தமான கேள்வியையும் எழுப்பினார். இந்த மோசடிப் பேர்வழிகள், காவி வேடமணிந்த கடைத்தர ஆசாமிகளின் சொத்துகளை அரசுகள் எடுத்துக்கொள்ள முழு நியாயமும், தகுதியும் சட்டப்படி உண்டு. உடனடியாக அதுபற்றி அரசுகள் சிந்தித்து செயலாற்ற தாமதிக்காமல் முன்வரவேண்டும். சாதாரண மோசடிக்காரர்களை உடனடியாக விரைந்து கைது செய்யும் அரசும், தண்டிக்கும் நீதிமன்றங்களும் இதுபோன்ற கொள்ளைத் திமிங்கிலங்களின் திமிர்வாத நடவடிக்கையை அனுமதிப்பது, சட்டத்தின் ஆட்சிக்கே சவாலானதல்லவா? அரசும், நீதிமன்றங்களும் அவ்வாறு பல்லற்ற வாயாக இருக்கலாமா? காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தி, மேற்கொண்டு செயல்படவேண்டும்!உடனடியாக தமிழ்நாடு அரசு இதற்கென தனிப் பிரிவை காவல்துறையில் உருவாக்கி, இந்தப் பகற்கொள்ளை படாடோப பம்மாத்துப் பேர்வழிகளி்ன் கொட்டத்தை அடக்கிட முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post கடவுள் அவதாரம் என கூறிக் கொண்டு நித்தியானந்தா, அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுவதா? கி.வீரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: