பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டலம் வாரியாக அதிகாரிகள் நியமனம்: மின்வாரியம் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை அதிதீவிர கனமழை செய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் பருவமழையை எதிர்க்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துறை வாரியாக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறைகள், தேங்கும் மழைநீரை வெளியேற்ற கனரக மோட்டார் பம்புகள், நிவாரண முகாம்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மெட்ரோ பணி, வடிகால் பணி, மின்வாரிய பணிகள் நடைபெறும் இடங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் செயற்பொறியாளர்களை மின்வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மின்வாரியம் தரப்பில் பொதுமக்கள் மின்சார்ந்த பிரச்னை தொடர்பான புகார்களை அளிக்க மின்னகம் மையம் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மழையின்போதே தண்ணீரில் முழ்கிய 4,800 பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டலம் வாரியாக அதிகாரிகள் நியமனம்: மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: