கருட சேவையில் வராகர் தரிசனம்

திருத்தணி: தரணிவராக சுவாமி கோயில் பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற கருட சேவை நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகுட்பட்ட மேல் பொதட்டூரில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி கோயில் புரட்டாசி பிரமோற்சவ விழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, கோயில் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உற்சவ விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடந்து வருகின்றன. காலை, மாலை நேரங்களில் உற்சவர் வாகன சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணி வராக சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவித்து கருட வாகனத்தில் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனையை தொடர்ந்து கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து, வாண வேடிக்கை, மேள தாளங்கள், கேரளா செண்டை மேளம் முழங்க சாமி திருவீதி உலா நடந்தது. பெண்கள் கற்பூர தீப ஆராதனை செய்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் 3ம் நாளான நேற்று மாலை சாமி அனுமந்த வாகன சேவை நடந்தது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

கும்மிடிப்பூண்டி: சிறுபுழல்பேட்டை ஊராட்சி, முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் மிக பழமையான ஸ்ரீதேவி பூதேவி சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 12ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் நேற்று முன்தினம் பெருமாள் சுவாமிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, சகல சூக்த ஹோமம், மூல மந்திர தீபாராதனை உள்ளிட்ட விஷேச பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று பட்டாச்சாரியார் யாகசாலையில் புனிதநீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சீனிவாச சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவும் நடந்தது.

The post கருட சேவையில் வராகர் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: