மாடுகள் ஒரு பக்கம்; குதிரைகள் இன்னொரு பக்கம் சாலைகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்: தடுத்து நிறுத்த கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் சாலையில் மாடுகளுக்கு போட்டியாக சுற்றி திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகள், நகராட்சி சாலைகள், பேரூராட்சி சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் கால்நடைகளை முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் சுற்றி வருகின்றன. இதேபோல், திருவள்ளூர் ஜெ.என். சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் குதிரைகளும் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் சுற்றி வருகிறது.

மாவட்ட தலைநகரான திருவள்ளூரிலிருந்து சென்னை, திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகளில் கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளிலும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் கட்டிப் போடாமல் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் படுத்துக்கிடப்பதுடன், உலா வருகின்றன.

இதனால் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் பேருந்துகள், லாரிகள் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணிக்கும்போது கடைகளில் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கை, கால்கள் உடைந்தும், பலத்த காயம் ஏற்பட்டும், மண்டை உடைந்தும் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை அடிக்கடி பார்க்கும் குதிரைகளின் உரிமையாளர்கள் தங்களது குதிரைகளை கட்டிப்போடாமல் அவிழ்த்து விட்டு விடுவதால் இதனாலும் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே குதிரைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு பராமரிப்பது அவரவர்களின் கடமையாகும். இவை சாலைகளில் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் உயிரிழப்பும் ஏற்பட காரணமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

* கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
சாலைகளில் அபாயகரமாக சுற்றவிடும் குதிரைகளின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்ப்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து தணிக்கை செய்து குதிரைகளை சாலைகளில் அவிழ்த்து விட்டு தவறிழைப்பவர்கள் மீது மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாடுகள் ஒரு பக்கம்; குதிரைகள் இன்னொரு பக்கம் சாலைகளில் விபத்தில் சிக்கும் வாகனங்கள்: தடுத்து நிறுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: