மாவட்டம் முழுவதும் 517 மிமீ மழை பதிவு இடி, மின்னலுடன் கனமழை: மரங்கள் முறிந்து விழுந்தன

*மண்சரிவு; கடும் பனி மூட்டத்தால் அவதி

ஊட்டி : நீலகிரியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 517 மி.மீ. மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடர்ந்து சுமார் 1 மாத காலம் நல்ல மழை பொழிவு இருந்தது. அதன் பின் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடந்த மாத இறுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த ஒரு வார காலம் மழையின்றி வறண்ட வானிலையே நிலவியது.

இந்த சூழலில் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல்வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிகடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பகலில் இருந்து கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பனி மூட்டத்துடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இருப்பினும் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து ஊட்டி, குந்தா, கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதுதவிர மழை காரணமாக கடும் குளிரும் நிலவியது. மழை காரணமாக பர்லியார் பகுதியில் மரங்கல் முறிந்து விழுந்தன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டது. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் டிஎஸ்பி வீரபாண்டி தலைமையிலான போலீசார், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் மண்சரிவு மற்றும் மரங்களை அகற்றினர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மிமீ) : ஊட்டி 3.2, நடுவட்டம் 10, கிளன்மார்கன் 17, மசினகுடி 3, குந்தா 37, அவலாஞ்சி 15, எமரால்டு 18, கெத்தை 46, கிண்ணக்கொரை 51, அப்பர்பவானி 9, பாலகொலா 43, குன்னூர் 30, பர்லியார் 35, கேத்தி 16, உலிக்கல் 7, எடப்பள்ளி 14, கோத்தகிரி 18, கொடநாடு 34, கீழ் கோத்தகிரி 22, கூடலூர் 12, என மொத்தம் 517.2 மி.மீ., மழை பதிவானது.

The post மாவட்டம் முழுவதும் 517 மிமீ மழை பதிவு இடி, மின்னலுடன் கனமழை: மரங்கள் முறிந்து விழுந்தன appeared first on Dinakaran.

Related Stories: