போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து: இன்று முதல் வழக்கமான சேவை தொடரும்

சென்னை: போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் நேற்றும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல் வழக்கமான சேவை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு கருதி பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், நேற்று வழக்கம்போல் விமான சேவைகள் இயங்கத் தொடங்கின. ஆனாலும் பயணிகள் பலர் விமான பயணம் மேற்கொள்ள முன்வராததால் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் 4 புறப்பாடு விமானங்களும், 4 வருகை விமானங்களும் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று அதிகாலை 4.40 மணிக்கு, சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 5.50 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 9.40 மணிக்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதியம் 2.15 மணிக்கு டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் காலை 9.10 மணிக்கு மதுரையில் இருந்து வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.30 மணிக்கு அந்தமானில் இருந்து வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.25 மணிக்கு டெல்லியில் இருந்து வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், போதிய பயணிகள் இல்லாமல், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று முதல், சென்னை விமான நிலையத்தில் வழக்கமான பயணிகளுடன், வழக்கமான விமான சேவைகள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

The post போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து: இன்று முதல் வழக்கமான சேவை தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: