சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைப்பது குறித்து இதுவரை ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்பதால் இத் திட்டம் பேச்சளவில் நின்றுவிட்டதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சென்னை புறநகர் ரயில்களை பொறுத்தவரை முதல் வகுப்பு மற்றும் பெண்களுக்கு என தனியாக பெட்டிகள் இருந்தாலும், ஏசி பெட்டிகள் இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் வந்துவிட்ட இந்த காலத்தில், புறநகர் ரயில்களில் புழுக்கத்தில் பயணம் செய்யும் பயணிகள், புறநகர் ரயில்களிலும் ஏசி பெட்டிகளை அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் பயணிகளின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில்கள். சென்னை புறநகரில் இருந்து நகருக்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் எளிதாக வர முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் புறநகர் ரயில்களையே நம்பி இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்தான் மிக முக்கிய வழித்தடங்களாக இருக்கின்றன. ஒரு நாளுக்கு இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாவிட்டலும் மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லும் அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் எற்பட்டுவிடும்.
பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர்கள் என அனைத்து தரப்பினரும் புறநகர் ரயில்களையே சார்ந்து இருப்பதால் இந்த ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 600க்கும் மேற்பட்ட நடைகள் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. புறநகர் ரயில்களை பொறுத்தவரை முதல் வகுப்பு மற்றும் பெண்களுக்கு என தனியாக பெட்டிகள் உள்ளன. எனினும், தனியாக ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இதுவரை இதுதொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ரயில்வே நிர்வாகத்திற்கு தகவலும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் சென்னையை போல அதிகம் லோக்கல் ரயில்கள் பயன்படுத்தப்படும் நகரம் என்றால் அது மும்பையைத்தான் சொல்ல முடியும். ஆனால் மும்பையில் இயங்கி வரும் உள்ளூர் ரயில்களில் கடந்த 2017ம் ஆண்டே ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.
தற்போது அங்கு முழுமையாக ஏசி பெட்டிகளை கொண்ட லோக்கல் ரயில்கள் இயங்கி வருகிறது. குறைவான கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பை மும்பை நகர மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். ஆனால் சென்னைக்கு இதுவரை ஏசி பெட்டி அறிமுகப்படுத்தப்படவில்லை. மும்பையில் இயங்கி வரும் லோக்கல் ரயில்களுக்கான ஏசி பெட்டிகள் எல்லாம் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆலையில் வைத்துதான் தயாரித்து அனுப்பப்படுகிறது. இந்த பெட்டிகள் அறிமுகமாகும்போதே சென்னை லோக்கல் ரயிலுக்கும் இந்த பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மும்பையில் லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகும் சென்னை லோக்கல் ரயில்களில் இதுவரை ஏசி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படவில்லை. தெற்கு ரயில்வே நிர்வாகமும் இதற்கான முன்னெடுப்பை இதுவரை எடுக்கவில்லை. தெற்கு ரயில்வே முடிவு செய்தால்தான் சென்னை லோக்கல் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க முடியும். ஆனால், தெற்கு ரயில்வே இதுகுறித்து நடவடிக்கை கூட எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது என்கின்றனர் பயணிகள்.
* இந்த வருடத்தில் இது ஆகாத காரியம்
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பது இந்த வருடத்தில் ஆகாத காரியம். ஆனால் வருங்காலத்தில் வாய்ப்பு இருக்கலாம். சாதரண புறநகர் ரயிலுக்கு செலவு என்பது குறைவு. ஆனால் ஏசி ரயிலுக்கு செலவு அதிகமாகும். புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைப்பதை விட, முழு ரயிலையும் ஏசி பெட்டிகளாக இயக்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் புறநகர் ரயிலில் 1 அல்லது 2 பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றினால் நடைமுறையில் அது சரிப்பட்டு வராது.
ஏற்கனவே 2024-25ம் நிதியாண்டில் மொத்தம் 6 ஏசி புறநகர் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதில் 2 மட்டும்தான் இந்த நிதியாண்டில் தயாரிக்கப்பட்டது. மீதி 4 ரயில்களை அடுத்த நிதியாண்டில் தயாரிக்க திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புறநகர் ரயில்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். அதனை தடுக்க தானியங்கி கதவு அமைப்பதும் சாத்தியமற்றது. ஏசி இல்லாத பெட்டியில் பயணிகளுக்கு காற்றோட்டமாக இருக்க தானியங்கி கதவு அவசியமற்ற ஒன்றாகும். ரயில்வே போர்டு அனுமதி அளித்தால் சென்னைக்கு ஏசி ரயில்கள் இயக்கப்படும். ஆனால் இன்னும் இது பேச்சு அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைப்பு; பேச்சளவில் நின்றுவிட்ட ரயில்வே திட்டம்? appeared first on Dinakaran.