மணிகண்டன் தெய்வ அவதாரம் என்றாலும் கூட, வேத நியமனங்களின்படி உரு ஏற்றப்பட்ட மந்திர சக்தி நேர்மறை காரியங்களுக்கு பயன்படுவது போன்று, எதிர்மறை காரியங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற நியதிப்படி, மணிகண்டனுக்கு உடலில் அம்மை போன்ற கொப்பளங்கள் ஏற்பட்டது. இதனால் நோய் தாக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார் மணிகண்டன். அரண்மனை வைத்தியர் உள்ளிட்ட தலைசிறந்த வைத்தியர்கள் பலர் வந்து வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை, இதனால் பெரும் மன வருத்தத்தில் ஆழ்ந்த மன்னர், தனது குல தெய்வமான சிவனிடம் கண்ணீர் மல்க தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
சிவபெருமானின் கட்டளைப்படி முனிவர் தோற்றத்துடன் வைத்தியர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். மன்னரை பார்ப்பதற்காக முனிவர் ஒருவர் வந்திருப்பது குறித்து வீரர்கள் தகவல் தெரிவித்தனர். முனிவரை வரவேற்ற மன்னர், வருகை குறித்து கேட்டறிந்தார். மணிகண்டனுக்கு வைத்தியம் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்தார். மகிழ்ச்சியடைந்த மன்னர், உடனடியாக மணிகண்டன் அறைக்கு அழைத்துச் சென்றார். தனிமையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவே வெளியேறுங்கள் என வைத்தியரான முனிவர் கூறியதை தொடர்ந்து மன்னர் உள்ளிட்டோர் வெளியேறினர்.
முனிவர், மணிகண்டன் உடலில் மந்திரங்கள் கூறி விபூதியை தேய்த்ததும் கொப்பளங்கள் இருந்த வடு தெரியாமல் மறைந்து போயின. மணிகண்டனிடம் தான் யார் என்பதை தெரிவித்தார் வைத்தியரான முனிவர். பிறகு பூரண குணமடைந்த மணிகண்டனை, மன்னனிடம் அழைத்துச் சென்றார். படுக்கையில் இருந்த மணிகண்டன், வீர நடைபோட்டு வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டு, மகிழ்ச்சியானார் மன்னர் ராஜசேகரபாண்டியன்.
சந்தோஷத்தில் வைத்தியராக வந்த முனிவருக்கு சன்மானம் வழங்க முன்வந்தார் மன்னர். அதனை மறுத்து, ஆசி வழங்கிவிட்டு சென்றார் முனிவர். மணிகண்டன் குணமடைந்ததை பார்த்த மந்திரிக்கு ஆச்சரியமும், கோபமும் வந்தது. மீண்டும் என்ன சூழ்ச்சி செய்யலாம் என சிந்திக்க துவங்கினார். சுவாமியே சரணம் ஐயப்பா..
(நாளையும் தரிசிப்போம்).
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு
The post ஐயப்பன் அறிவோம் 22: முனிவரின் மருத்துவம் appeared first on Dinakaran.