மணிகண்டன் பூரண குணமடைந்த மகிழ்ச்சியில் இருந்த மன்னர், அரண்மனையில் விழா எடுக்க எண்ணி, தனது இரண்டாவது மகனுக்கு பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்ய மந்திரிக்கு உத்தரவிட்டார். இதன்படி விழா கோலகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வினை பார்த்து கொண்டிருந்த மந்திரிக்கு, இரண்டாவதாக புதிய சதிக்கான யுக்தி தோன்றியது. உடனே ராணியை சந்தித்து, ‘‘தங்களுக்கு பிறந்த ராஜராஜன் நேரடி வாரிசாக இருக்கும்போது, எங்கோ காட்டில் கிடந்த, முகவரி இல்லாத குழந்தைக்கு மன்னர், இளவரசன் பட்டம் சூட்ட முடிவு செய்து விட்டார்.
அனைத்திலும் கைதேர்ந்தவரான மணிகண்டன், அடுத்து அரசனாகவும் வருவார். இதனால் உங்கள் வயிற்றில் பிறந்த குழந்தை இரண்டாவது மனிதன் போன்று பிரதிநிதித்துவமின்றி போய் விடுவார். எனவே மணிகண்டனுக்கு முடி சூட்ட விடாமல் தடுக்க வேண்டும். ஒழித்து கட்டவேண்டும்’’ என்கிறார். இதனை கேட்டு பதறிய ராணி, பதவிக்காக வளர்த்த குழந்தையை எப்படி ஒழிப்பது என மறுக்கிறார். இருந்தாலும் விடாப்பிடியாக ஒவ்வொரு நடைமுறைகளையும் எடுத்துக்கூறி, மூளைச்சலவை செய்கிறார் மந்திரி. இதனைத்தொடர்ந்து சற்று மனம் மாறிய ராணி, ‘‘மந்திரிக்கு தெரியாத யோசனையா? உங்கள் எண்ணப்படி நடக்கட்டும்.
அதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும். அதை மட்டும் சொல்லுங்கள்’’ என்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த மந்திரி, ‘‘தாங்கள் தீராத தலைவலியால் அவதிப்படுவது போல் நடியுங்கள், இதற்கு தீர்வை நானே பார்த்துக் கொள்கிறேன்’’ என கூறிவிட்டு புறப்படுகிறார். மந்திரியின் தந்திரத்தை புரியாத ராணியும் சம்மதம் தெரிவித்து நடிக்க தொடங்கினார். தீராத தலைவலி நாடகம் துவங்கியது. தலைவலி குறித்து அறிந்த மன்னர், உடனடியாக அரண்மனை வைத்தியரை வரவழைத்தார். வைத்தியர் வந்து மருந்து தந்தாலும் அது தீராதது போல் ராணியும் நடித்தார். சுவாமியே சரணம் ஐயப்பா…. (நாளையும் தரிசிப்போம்).
The post ஐயப்பன் அறிவோம் 23 2வது சூழ்ச்சி appeared first on Dinakaran.