ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியான பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்களில் அமைந்துள்ளது. இதில், உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனத்தை ரசித்து செல்ல, தினமும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம் வந்து செல்கின்றனர். பொள்ளாச்சியை கடந்து டாப்சிலிப் வனத்திற்குள் செல்ல சேத்துமடை சோதனை சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். சேத்துமடை பகுதியானது மலையடிவாரத்தில் இயற்கை சூழ்ந்த இடமாக அமைகிறது.
இதனால், பொள்ளாச்சியை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், சேத்துமடை மலையடிவாரத்தில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் விளக்க மையத்தை பார்வையிட்டும், வனத்தில் குறிப்பிட்ட தூரத்துக்கு நடந்துசென்று, விலங்குகளை பார்த்து ரசித்தும் செல்கின்றனர். இந்நிலையில், சேத்துமடை சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்திற்காக, சுமார் 1.5 ஹெக்டேர் பரப்பளவு பகுதியில், சுற்றுச்சூழல் ஓய்வு விடுதிகள், வன விலங்கு சவாரிகள் மற்றும் கல்வி பணி மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேத்துமடையில் தங்கும் விடுதி, வன விலங்கு சம்பந்தமான விளக்க மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படும், சூழல் சுற்றுலா திட்டத்திற்காக, தமிழ்நாடு வன அனுபவ கழகம் மூலம் அண்மையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும்போது, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிப்பதுடன், பொள்ளாச்சி அருகே உள்ள சுற்றுலா பகுதியையொட்டியுள்ள இடங்கள் பொருளாதார வளர்ச்சியடையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post சேத்துமடையில் சூழல் சுற்றுலா திட்டம் appeared first on Dinakaran.