28 % வரை ஆயத்த ஆடைகளுக்கு ஜிஎஸ்டிக்கு பரிந்துரை

உயிர் வாழக்கூடிய அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக உணவிற்கு அடுத்து உடை என்னும் ஜவுளி தேவைப்படுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வருவாய் தரக்கூடியதும், வேலைவாய்ப்பு தரக்கூடியதும் ஜவுளி உற்பத்திதான். 35 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியதாக ஜவுளி தொழில் விளங்குகிறது.

உலக நாடுகள் முழுவதற்கும் ஜவுளி ஏற்றுமதி செய்வதில் இந்தியா பெரும்பங்காற்றி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை திருப்பூர் தொழில் துறையினர் அளித்து வருகின்றனர். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பேற்ற பின்பு எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு, வங்கதேசம் நாட்டிற்கான வரி சலுகை உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி தொழில் நலிவடைந்தது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6வது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டது. நலிவடைந்த தொழிலை மீட்டெடுப்பதற்கான பல்வேறு கோரிக்கைகளையும், திட்டங்களையும் தொழில் துறையினர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒன்றிய பாஜ அரசு தொழில் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

2017 ஜூன் 1ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் பெரும் பின்னடைவை நோக்கி சென்றன. குட்டி ஜப்பான், டாலர் சிட்டி என அழைக்கப்பட்ட திருப்பூரில் செயல்பட்டு வந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 50 சதவீதம் மூடப்பட்டன. நலிவடைந்த தொழிலை மீட்டெடுக்க திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு கட்டங்களில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது முதலே உள்நாட்டு வர்த்தகம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் எடுத்துக்கொண்ட நிலையில் பேரிடியாக தற்போது 28 சதவீதம் வரியை உயர்த்தலாம் என்ற பரிந்துரை ஏற்கப்படுமானால் திருப்பூர் போன்ற ஜவுளி தொழில் நிறைந்த நகரங்கள் தங்கள் அடையாளத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும். தற்போது 5 முதல் 12 சதவீதம் வரை ஜிஎஸ்டி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த ஆயத்த ஆடைகளுக்கான துணி விற்பனையாளர் யோகி செந்தில் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் அதனை குறைப்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை, தொழில் அதல பாதாளத்திற்கு சென்றபோதும்கூட கவனத்தில் கொள்ளாத ஒன்றிய அரசு தற்போது ஜிஎஸ்டி வரியை 28 சதவீதம் உயர்த்துவது என்ற பரிந்துரையை ஏற்குமானால் தொழில் துறை மிகவும் பாதிப்படையும்.

ஏற்கனவே, மின்கட்டண உயர்வு, சொத்துவரி, தொழில் வரி என வரி உயர்வுகள், வங்கதேச துணிகள் நேரடியாக இந்தியாவில் இறக்குமதி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுமானால் தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு தொழில் துறையினர் தினமும் போராட வேண்டிய சூழல் ஏற்படும். எனவே பீகார் துணை முதல்வர் தலைமையிலான ஜிஎஸ்டி குழுவினர் பரிந்துரை செய்த ஜிஎஸ்டி வரி உயர்வை ஒன்றிய அரசு அமல்படுத்தக்கூடாது’’ என்றார்.

ஆயத்த ஆடை வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்தே மக்களிடம் வாங்கும் திறன் குறைந்தது. தற்போது 1,500 ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, 1,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கினால் 28 சதவீத ஜிஎஸ்டி என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவை, அமல்படுத்தப்படுமானால் மக்களிடம் வாங்கும் திறன் குறையும். உதாரணமாக திருமணம் போன்ற விசேஷங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆடை எடுக்க நேர்ந்தால் 12,800 ரூபாய் செலுத்த வேண்டியது வரும். இதன் காரணமாக சாமானிய மக்களின் புத்தாடை கனவு நிறைவேறாமல் பகல் கனவாகி விடும். எனவே மனிதனின் அத்தியாவசிய தேவையான ஆடை மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை அமல்படுத்தக்கூடாது’’ என்றனர்.

* ஜவுளி தொழில் முடங்கும் அபாயம்
* அதிக அளவில் வேலையிழப்பு ஏற்படும்
* சாமானிய மக்களின் புத்தாடை கனவு தகரும்

* தற்போது 1,500 ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, 1,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கினால் 28 சதவீத ஜிஎஸ்டி என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* உதாரணமாக திருமணம் போன்ற விசேஷங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆடை எடுக்க நேர்ந்தால் 12,800 ரூபாய் செலுத்த வேண்டியது வரும். இதன் காரணமாக சாமானிய மக்களின் புத்தாடை கனவு நிறைவேறாமல் பகல் கனவாகி விடும்.

* 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்தலாம் என்ற பரிந்துரை ஏற்கப்படுமானால் திருப்பூர் போன்ற ஜவுளி தொழில் நிறைந்த நகரங்கள் தங்கள் அடையாளத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும்.

* இந்திய பயனாளர்கள் அதிகம்

சீனா மக்கள் தொகையில் முதலிடம் பெற்றாலும் கூட அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் ஆடைகளின் அளவு குறைவு. சராசரியாக சீன மக்கள் ஒவ்வொருவரும் 2 முதல் 4 மீட்டர் வரையிலான துணி மட்டுமே பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கலாச்சாரப்படி ஆடைகளை சராசரியாக 4 முதல் 7 மீட்டர் வரை பயன்படுத்துகின்றனர். எனவே, ஜவுளி துணியின் பயன்பாடு இந்தியாவில் அதிகம். ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வு என்பது உள்நாட்டிலேயே உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களை பாதிப்புக்குள்ளாக்கும் திட்டம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள பின்னலாடை தொழில் மிகப்பெரும் சரிவை சந்தித்தது.‌ இதிலிருந்து தொழில் துறையை மீட்டெடுக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய ஜவுளி கொள்கையை உருவாக்க வேண்டும். பின்னலாடை துறைக்கான தனி வாரியம் அமைத்திட வேண்டும் என தொடர்ந்து தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தொழில் துறையின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு மேலும் தொழிலை நசுக்குவதற்கான அறிவிப்புகளையே வெளியிடுகிறது.

* ஒரு நாளைக்கு ரூ.100 கோடி

தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேஷ்டி, சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது.

* வரி மிகுந்த நாடாக மாறும்

5, 12, 18, 28 சதவிகிதம் என நான்கு கட்டங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் 5 முதல் 12 சதவீதம் ஆயத்த ஆடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி பரிந்துரை செய்திருப்பது. தொழில் துறையை மட்டுமல்லாது ஜவுளி பயன்பாட்டாளர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில பொருட்களுக்கு விலைக்கு ஏற்றவாறு ஸ்பெஷல் ஜிஎஸ்டி 35 சதவீதம் உயர்த்தும் புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரலாம் என பரிந்துரையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உலகிலேயே இந்தியா வரி மிகுந்த நாடாக மாறும் என கருதப்படுகிறது.

* இறக்குமதிக்கு வழிவகுக்கும்

இந்தியா-வங்க தேசத்திற்கு அளித்த வரிச்சலுகை காரணமாக ஏற்கனவே அங்கிருந்து ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாவதால், இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் குறிப்பாக திருப்பூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, இந்தியாவில் மீண்டும் ஜிஎஸ்டி அதிகப்படுத்தப்படுமானால் வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் துணிகள் அதிகளவு புழக்கத்திற்கு கொண்டு வரப்படும். இதன் காரணமாக இந்திய ஜவுளித்துறையினர் பாதிப்படைவர்.

The post 28 % வரை ஆயத்த ஆடைகளுக்கு ஜிஎஸ்டிக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: