ஐயப்பன் அறிவோம் 25: புலிப்பால் தேடி…

ராணியின் தலைவலி தீர்க்க புலியை தேடி காட்டுக்குள் மணிகண்டன் செல்லும் முடிவை உடனடியாக மறுக்கிறார் மன்னர் ராஜசேகரபாண்டியன். ‘‘நீ சிறுவன், அதுவும் நாட்டின் இளவரசர். படை, பரிவார பலம் இருக்கும் போது நீ தனியாக செல்லக்கூடாது’’ என்கிறார். தாயின் தலைவலி என்பது நாடகம் என்பதையும், தனது அவதார நோக்கம் அறிந்த தெய்வம் என்பதாலும் சிரித்தபடியே, ‘‘தந்தையே, தாயின் நோயை தீர்க்க கூடியதாக அருமருந்தாக வைத்தியரால் கூறப்படும் புலியின் பாலை என்னால் கண்டிப்பாக கொண்டு வரமுடியும்.

ஒருவேளை உங்கள் அச்சப்படி, எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் என்ன? எனக்கு பிறகு என் தம்பி ராஜராஜன் இருக்கிறார். அவர் இளவரசனாகட்டும்’’ என கூறுகிறார். மணிகண்டனிடம் இருந்து சற்றும் எதிர்பாராத இந்தப் பதிலை கேட்டதும், ராணி மனம் வருந்தி கண்ணீர் சிந்துகிறார். தொடர்ந்து சம்மதிக்க மறுத்த மன்னரிடம், ‘‘அனுமதி தாருங்கள், மறுக்க மாட்டேன் என சத்தியம் செய்யுங்கள்’’ கூறி ஒருவழியாக சமாதானம் செய்கிறார் மணிகண்டன். ‘‘செல்வது என்று முடிவாகி விட்டது.

காட்டிற்குள் செல்லும் போது உனக்கு துணையாக படை வீரர்களை அழைத்து செல்’’ என்கிறார் மன்னர். ‘‘வேண்டாம் தந்தையே, மனிதர்கள் கூட்டமாக சென்றால் புலிக்கூட்டம் பார்த்து பயந்து ஓடிவிடும். எனவே நானே, தனி ஒருவனாக செல்கிறேன்’’ எனக் கூறி புறப்பட தயாராகிறார். மணிகண்டன் தற்காப்பிற்காக கையில் வில், அம்பு மற்றும் வழியில் உண்ணுவதற்கு முக்கண் உடைய தேங்காய், அதில் நெய் உள்ளிட்ட உணவு பொருட்களை இரு முடிச்சு பொட்டலங்களாக போட்டு (இருமுடி) சிவபூஜை செய்து கிளம்ப, ஆசிர்வதித்து அனுப்புகிறார் மன்னர்.

அரண்மனையிலிருந்து காட்டிற்கு வீர மணிகண்டனாக புறப்பட்டார் மணிகண்டன். இதனை பார்த்த மந்திரி, தனது தந்திரம் வெற்றியடைய போகிறது என எண்ணி எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறார். புலிகள் வாழக்கூடியதும், மதங்க முனிவர் வாழக்கூடியதும், தான் பிறந்த பம்பா நதி ஓடும் அடர்ந்த மலைக்காட்டு பகுதியை நோக்கி நடக்க துவங்குகிறார் மணிகண்டன். மலைப்பகுதிக்குள் நுழைந்ததும் (சபரிமலை நுழைவு பூங்காவனம் இன்றைய எரிமேலி) அவருக்கு உறுதுணையாக சிவனின் உத்தரவின்படி பூதகணங்களான வாபூரன், கடுசப்தன், வீரபத்திரன், கூபனேத்ரன், கூப கர்ணன், கண்டா கர்ணன், மகாபலி புடை சூழ பம்பா நதிக்கரையை அடைகிறார்.
சாமியே சரணம் ஐயப்பா (நாளை தரிசிப்போம்).
சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 25: புலிப்பால் தேடி… appeared first on Dinakaran.

Related Stories: