இந்த பூங்காவில் ஆண்டு தோறும் கோடை காலங்களில் மலர் கண்காட்சி, ரோஜா காட்சி மற்றும் பழக்கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது, பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், சுற்றுலாத்துறை சார்பில் ஊட்டியில் படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை அமைக்கப்பட்டு அங்கு 100க்கும் மேற்பட்ட மிதி படகுகள், மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்கப்படுகிறது.
குறிப்பாக, பைக்காரா ஏரியில் இயக்கப்படும் ஸ்பீட் போட்டுகள் மற்றும் பைக்குகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொடர்ந்து, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த சுற்றுலா தலங்களில் பல்வேறு நவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஊட்டி ஏரியில், பல லட்சம் செலவில் பல்வேறு சாகச விளையாட்டுக்களுக்கான பணிகளும் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒன்றிய அரசு உலக அளவில் சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் சுற்றுலா அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், நாட்டில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா மையங்களை விரிவாக மேம்படுத்தி, அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கும், மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்குவதாகும். இத்திட்டத்தினால் உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், நிலையான சுற்றுலா திட்டங்களின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்கிறது. திட்டங்களை முடிக்க மாநிலங்களுக்கு 2 ஆண்டு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 23 மாநிலங்களில் ரூ.3295.76 கோடி செலவில் 40 திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை மூலம் தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தேவாலா பொன்னூர் தோட்டக்கலைத்துறை பண்ணையில் ரூ.70.23 கோடியில் பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இங்கு படகு இல்லம் உட்பட பல்வேறு வசதிகள் கொண்டு வரப்படவுள்ளது. இந்த பூங்கா அமைக்கப்பட்டால், கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். தேவாலா தமிழ்நாடு – கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. அதேபோல், கர்நாடக மாநிலமும் மிக அருகில் உள்ளது. இதனால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.
அதேசமயம், மிகவும் கடைக்கோடியில் உள்ள இப்பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் செல்வதன் மூலம் தேவாலாவை சுற்றியுள்ள பகுதிகளும் மேம்பாடு அடைய வாய்ப்புள்ளதோடு, சுமார் 2,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு – கேரள மாநில எல்லையில் உள்ள சுற்றுலா தலமான வயநாட்டிற்கு அதிகளவு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இனி தேவாலாவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு மேலும் ஒரு புதிய சுற்றுலா தலம் உருவாவது மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர முடியும்.
The post 3 மாநிலத்துக்கு மைய பகுதியாக உள்ள தேவாலாவில் ரூ.70.23 கோடியில் பிரமாண்ட பூங்கா: 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.