இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானம் லண்டன் லார்ட்ஸ் போல் கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: 200 ஏக்கரில் 2,00,000 பேர் அமரும் வகையில் அமைகிறது

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதிலும், வீரர்களுக்கு உதவித்தொகை தந்து ஊக்குவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு சர்வதேச போட்டிகளை இங்கு நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையில் கார் பந்தயம், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி, பீச் வாலிபால் என சொல்லிக் கொண்டே போகலாம்.

வீரர்களை உத்வேகப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இவர்கள் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க வேண்டும் என்பதால் அதற்கு இணையான மைதானங்கள், ஆடுகளத்தை நவீனப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி 2ம் நகரங்களான திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக புதிய மைதானங்கள் அமைப்பது, நவீனப்படுத்துவது போன்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க 200 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடந்தது. இதில் கோவை ஒண்டிப்புதூர் எல் அண்டு டி நெடுஞ்சாலை அருகே உள்ள ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச்சாலை வளாகம், கிரிக்கெட் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 7.4.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த இடம் சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் இருப்பதால், இப்பகுதியில் மைதானம் அமைப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, சிறைத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை விளையாட்டுத்துறைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உதவியுடன் இப்பணி கடந்த மாதம் நிறைவுபெற்றது.

இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மேம்பாட்டிற்கான டிபிஆர் தயாரிப்பதற்கும், வடிவமைப்பு ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கும் டெண்டர் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்குள் டிபிஆர் டெண்டர் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மொத்தம் 198 ஏக்கர் பரப்பளவில் டிபிஆர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மைதானம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும். நாட்டிலேயே மிகப்பெரிய பார்வையாளர்கள் அமரும் திறன்கொண்ட அரங்கத்தை அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது. அதாவது, குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தைவிட பெரிய மைதானமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் இந்த கட்டமைப்பை உருவாக்க உள்ளனர். நட்சத்திர விடுதிகள், உணவகங்கள், கிளப் ஹவுஸ் என முழுக்க முழுக்க ஐந்து நட்சத்திர வசதிகளை கொண்ட நவீன விளையாட்டு மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம் ஆகியவற்றை “நேரடி கேஸ் ஸ்டடி’’களாக சிபாரிசு செய்து, அதைவிட பிரம்மாண்டமாக, லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் கலைநயத்தோடு கட்ட முடிவு செய்துள்ளனர்.

வீரர்கள், நடுவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கான இடங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உயர் தரமான இருக்கை வசதி தொடங்கி, பல நவீன வசதிகள் இங்கே வர உள்ளன. தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரத்தை, விளையாட்டு துறையிலும் உலகமே உற்று நோக்கும் வகையில் மேலும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, சிறப்புவாய்ந்த இந்த கிரிக்கெட் மைதானம் வடிவமைப்பு குறித்தும், பல்வேறு முக்கிய அம்சங்கள் அடங்கிய பூர்வாங்க பணிகள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் குறித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவுசெய்துள்ளார். அதில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம், கோவையில் புதிய அடையாளமாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.

மைதானத்தில் என்னென்ன வசதிகள்

* வீரர்கள் தங்க நவீன ஓட்டல் அறைகள், ஓய்வறை
* வீரர்களின் வசதிக்காக தனியாக உணவகம்
* ஸ்பா, கிளப் ஹவுஸ், ஸ்போர்ட்ஸ் பார், பொழுதுபோக்கு வசதிகள்
* விஐபி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறைகள்,
* ஊடகம், ஒளிபரப்பு பிரத்யேக அறைகள்,
* விடுதிகள், உணவகங்கள், அருங்காட்சியகம்
* உட்புற பயிற்சி அரங்கம், சிறப்பு உள்ளரங்க பீல்டிங் மண்டலம்
* பிட்ச் க்யூரேஷன் பயிற்சி, விரிவுரை அரங்குகள், உயர் செயல்திறன் மைய வசதிகள்

The post இந்தியாவிலேயே மிகப்பெரிய மைதானம் லண்டன் லார்ட்ஸ் போல் கோவையில் பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: 200 ஏக்கரில் 2,00,000 பேர் அமரும் வகையில் அமைகிறது appeared first on Dinakaran.

Related Stories: