அடி முடி காணாத பரம்பொருளாக, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளி, ஜோதி வடிவாக உயர்ந்து நின்ற திருவடிவமே அண்ணாமலை. திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், கிருத்திகை தினத்தில் நடைபெறும் மகாதீபப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றது. மகா தீபத்தன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். ஜோதிப்பிழம்பாக இறைவன் காட்சியளிக்கும் தீபத்தை தரிசனம் செய்வது அகஇருளை நீக்கும் ஆன்மிக அனுபவமாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி காலை 6.00 மணி முதல் 7.25 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. வரும் 13ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைதர வாய்ப்பு இருக்கும் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
எனவே, கடந்த ஆண்டு 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 24 இடங்களில் அமைக்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு 2840 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 4089 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், தெற்கு ரயில்வே சார்பில் 22 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். அண்ணாமலையார் கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிநவீன சுழலும் காமிராக்கள் உள்பட 706 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
டிரோன் கேமரா, பேஸ் டிராக்கிங் கேமரா கண்காணிப்பு, 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 84 இடங்களில் காவல் உதவி மையங்கள் என விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தீபத்திருவிழாவின்போது வாகன நெரிசலை தவிர்க்க, நகருக்கு வெளியே 120 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து 16,000 வாகனங்கள் நிறுத்தவும் வசதி செய்யப்படுகிறது. அதேபோல், தீபம் ஏற்றும் மலைப் பகுதியில் மீட்புப்பணியில் 120 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறையினர் ஆகியோரும் அவசரகால மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
* பரணி தீபத்துக்கு 7,500 பக்தர்கள் மகா தீபத்துக்கு 11,500 பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபம் தரிசனத்திற்கு 7,500 பக்தர்களையும், அன்று மாலை மகாதீபம் தரிசனத்திற்கு 11,500 பக்தர்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இட வசதி மற்றும் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. கட்டளைதாரர்கள், திருப்பணி உபயதாரர்களுக்கு பாஸ் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பரணி தீபத்திற்கு 500 டிக்கெட்டுகளும், மகா தீபத்திற்கு 1100 டிக்கெட்டுகளும் கட்டண அடிப்படையில் ஆன்லைன் மூலம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
* நெய் காணிக்கை செலுத்த சிறப்பு வசதி
தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலைமீது காட்சியளிக்கும். அதையொட்டி, மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ முதல்தர தூய நெய் பயன்படுத்தப்படுகிறது. அதையொட்டி, மகா தீபம் நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் வசதிக்காக அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் ரொக்கமாகவும் அல்லது யுபிஐ பணபரிவர்த்தனை மூலமும் செலுத்தலாம். கோயில் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீபச்சுடர் (தீபமை) பிரசாதம் வழங்கப்படும்.
* மலை ஏற பக்தர்களை அனுமதிப்பது பாதுகாப்பு அல்ல: வனத்துறை எச்சரிக்கை
திருவண்ணாமலை தீபமலையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ளதால், வனத்துறை சார்பில் மலைக்கு சென்று ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், மலையில் தீபதரிசனத்துக்காக பக்தர்கள் வழக்கமாக செல்லும் வழியில், சுமார் 800 மீட்டர் வரை மண் சரிந்துள்ளது. அதேபோல், தீப கொப்பரை வைக்கும் இடத்தின் அருகிலும் சுமார் 100 மீட்டர் வரை மண் சரிந்துள்ளது. பாறைகள் உருண்டு விழும் நிலையில் உள்ளது. அதேபோல், கொப்பரை மற்றும் நெய் டின் எடுத்துச் செல்லும் வழித்தடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கொப்பரை, நெய் கொண்டு செல்ல வேண்டும். மேலும், பக்தர்களை மலையேற அனுமதிப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், இந்த ஆண்டு அனுமதி அளிக்கக்கூடாது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘வல்லுநர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும்’ என்றார்.
The post திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள் appeared first on Dinakaran.