முத்துப்பேட்டை-பிச்சாவரம் 2100 க்குள் கடலில் மூழ்கும் அலையாத்தி காடுகள்? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு

உலக அளவில் அலையாத்தி காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியது. முத்துப்பேட்டை பகுதியில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு வரை நீண்டுள்ளது.

இங்கு அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற 6 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையானது. மொத்த சதுப்புநில தாவரங்களில் எண்ணிக்கையால் 95 சதவீதத்திற்கு மேலாக இது காணப்படுகிறது. அலையாத்தி மரங்கள் ஓதநீர் வாய்க்கால்கள் மற்றும் உப்புத்தோட்டத்தின் கரையோரங்களில் அழகாக வரிசையாக காணப்படுகின்றன. முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்க பகுதி தில்லை மரங்களும், நடுப்பகுதயில் நரிகண்டல் மரங்களும் இறுதியாக அலையாத்தி மரங்களாக காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த உயரமான அலையாத்தி மரங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது.

1970க்கு முன் கருங்கண்டல், நெட்டை சுரபுன்னை, குட்டை சுரபுன்னை போன்ற மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த மரவகைகள் தற்பொழுது மாயமானதற்கு சரியான காரணத்தை கூற முடியவில்லை என்று வனத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை வருகின்றன.

இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும் தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரப்பாதைகள், உயர்கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள், காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணம் செய்யலாம். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கஜா புயலில் வீழ்ந்ததை சரி செய்ய வனப்பகுதியில் அலையாத்திக்காடுகளை உருவாக்குவதற்கும், புனரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் வனத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் அருகே பிச்சாவரத்தை பொறுத்தவரை சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலங்களில் சுரபுன்னை எனப்படும் அலையாத்தி காடுகள் உள்ளது. பிச்சாவரம் சதுப்பு நிலங்களில் அரிய வகையான இறால்கள், கட் நண்டு எனப்படும் நண்டு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏராளமான மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் சதுப்பு நிலங்களில் இறங்கி மீன், இறால், நண்டு போன்றவற்றைப் பிடித்து வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

சதுப்பு நிலங்கள் மிகப்பெரிய மண்ணரிப்பு, புயல் போன்றவற்றை தடுக்கும் வல்லமை உடையது. குறிப்பாக சுனாமி போன்ற பேரலைகளை கட்டுப்படுத்தி நிறுத்தும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது உலகெங்கும் பெரிய ஆபத்து ஏற்பட்டது. ஆனால் சிதம்பரத்தின் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை காடுகள் இருந்த இந்த பகுதிகளில் எந்த ஆபத்தும் நெருங்கவில்லை. அந்த அளவிற்கு சதுப்பு நிலங்கள் ஆபத்பாந்தவனாக மாறி மண்ணையும் மக்களையும் காத்திருக்கிறது.

இந்நிலையில், கடல் மட்டம் உயர்வதால் 2100ம் ஆண்டுக்குள் முத்துப்பேட்டையில் 2,382 ஹெக்டேரும், பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கி கடலோர பாதிப்பு அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. இந்த இழப்பு உள்ளூர் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது, புயல் தாக்கங்களை தீவிரப்படுத்துகிறது, மேலும் 2.24 டெராகிராம் கார்பனை வெளியிடலாம். இது உலகளாவிய காலநிலை நெருக்கடியை மோசமாக்குகிறது. இந்த முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய கடலோர சமூகங்களை பாதுகாப்பதற்கும் அவசர பாதுகாப்பின் அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர் என ஆய்வில் கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘எங்களுக்கு இதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை. அலையாத்திகாடு பகுதியில் ‘சில’ பகுதி நீரில் மூழ்கும், சில பகுதி புதிதாக உருவாகும். அதே நேரத்தில் புதிதாக உருவாகும் பகுதிதான் இங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது கடந்த காலங்களை விட அதிகளவில் நிலப்பரப்பு கூடியுள்ளது, காட்டின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. இதுநாள்வரை நிலப்பரப்பு குறையவில்லை. நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் உள்ளது’’ என்றனர்.

* முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய அலையாத்தி காடாகும். உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
* இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும் தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரப்பாதைகள், உயர்
கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள், காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
* பிச்சாவரத்தை பொறுத்தவரை சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலங்களில் சுரபுன்னை எனப்படும் அலையாத்தி காடுகள் உள்ளது.

* 100 ஆண்டாக பாதுகாத்து வரும் அலையாத்தி காடு
2018ம் ஆண்டு இப்பகுதியை தாக்கிய கஜா புயல் அலையாத்தி காட்டையும் பாதித்தது. இதனால் காட்டின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின் தங்கி விட்டதாக அப்போது ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலை தாங்கிபிடித்து முத்துப்பேட்டை பகுதி மக்களை காப்பாற்றி வீழ்ந்த இந்த அலையாத்திக்காடு இப்பகுதி மக்களின் நேசத்திற்குறிய காடாக மாறியது. இதுபோன்றுதான் இப்பகுதி மக்களை, பல நூறு ஆண்டாக இந்த அலையாத்திகாடு பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* மீன்முள், தமிழ்வாழ்க வடிவில் வாய்க்கால்கள் வடிவமைப்பு
சமீபத்தில், மீன்முள் வடிவிலான வாய்க்காலை தவிர, தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுமார் 9 ஹெக்டேர் பரப்பளவில் “தமிழ்வாழ்க” எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்களில் அவிசெனியா, மெரினா எனப்படும் கருங்கண்டல் வகையான அலையாத்தி செடிகள் நடப்பட்டுள்ளன. அடுத்து 3 முதல் 5 வருடங்களில் மொத்தம் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அலையாத்திக்காடுகள் உருவாகி வரும்போது அதில் உள்ள இந்த “தமிழ் வாழ்க’’ எனும் அமைப்பு மிகவும் தனித்துவமான அலையாத்திக்காடுகள் தோட்டமாக உருவாக வாய்ப்புள்ளது. இப்படி கஜா புயலுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில் பழைய நிலைக்கு காடுகளின் வளர்ச்சியை உருவாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* பிரமிக்க வைக்கும் குட்டி குட்டி தீவுகள்
முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூர பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கிறது. உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகு பிரமிக்க வைக்கிறது. ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்கு செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு ஒட்டு மொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்க பூமியாக இதுவிளங்குகிறது.

* தாவரங்கள், உயிரினங்கள் அழியும்
கடல் நீர்மட்டம் உயர்வதால் இந்த சதுப்பு நிலத் தாவரங்களும் அழியும் என கூறப்படுவதால் சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் கவலை கொண்டிருக்கின்றனர். சதுப்பு நிலம் கடல் நீர்மட்டத்தால் அழிந்தால் அதை நம்பியுள்ள வியாபாரம் செழிக்காது. குறிப்பாக மீன்பிடித் தொழில், இறால், நண்டு ஏற்றுமதி போன்ற தொழிலில் பெரிய பாதிப்பு ஏற்படும். இதுபோல் நூற்றுக்கணக்கான அரிய வகை நீர்வாழ் உயிரினங்கள் இந்த சதுப்பு நிலங்களில் வளரும் தன்மை உடையது. சதுப்பு நிலங்கள் அழிவால் இந்த உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும்.

அதனால் இவற்றை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க சதுப்பு நில தாவரங்களை நம்பி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் இங்கு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வருவதால் நவீன அரிய வகை பறவைகளின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. காலப்போக்கில் சதுப்பு நிலங்கள் அழியுமானால் அரியவகை பறவைகளின் வருகையும், இனப்பெருக்கமும் கேள்விக்குறியாகும் என்பதே பறவை ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.

The post முத்துப்பேட்டை-பிச்சாவரம் 2100 க்குள் கடலில் மூழ்கும் அலையாத்தி காடுகள்? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: