எல்லாபுரம் ஒன்றியத்தில் சிதிலமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி: புதிதாக கட்டித்தர கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை, அக். 7: பெரியபாளையம் அருகே, வெங்கல் கிராமத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றி புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள வெங்கல்-சீத்தஞ்சேரி சாலையில் அம்பேத்கர் நகர் பகுதியில் 40 வருடத்திற்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

தற்போது, இந்த குடிநீர் தொட்டியின் 6 தூண்களின் சிமென்ட் சிலாப்புகளும் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுகள் போல் காட்சியளிக்கிறது. இந்த பழைய தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது சம்மந்தமாக ஊராட்சி தலைவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும், பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார். கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சிதிலமடைந்த நிலையில் குடிநீர்த் தொட்டி இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என கூறினர்.

The post எல்லாபுரம் ஒன்றியத்தில் சிதிலமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி: புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: