தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: பருவ மழைக்குள் சீரமைக்க கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், கடப்பேரி, கிருஷ்ணா நகர், சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், செம்பாக்கம், பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூர், சி.டி.ஓ காலனி, மாடம்பாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை, அனகாபுத்தூர், பம்மல், திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, மக்கள் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக, பல இடங்களில் மின்கம்பிகள் முழுவதும் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் லேசாக காற்று வீசினாலும் மரக்கிளைகள், மின் கம்பிகள் மேல் உரசி பயங்கர சத்தத்துடன் தீப்பொறி ஏற்படுவதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் மரக்கிளைகள் மற்றும் மின் கம்பிகள் உரசும்போது தீப்பொறி ஏற்பட்டு சில சமயங்களில் மின் கம்பிகள் கீழே அருந்து விழும் நிலை ஏற்படுகிறது.

இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் செடிகொடிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை முறையாக பராமரிப்பது இல்லை. இதனால் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்த சிறிய காற்று அடித்தாலே ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.

தற்போது அடிக்கடி காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மரக்கிளைகள், செடி கொடிகள் மின்கம்பிகளில் உரசி தீப்பொறி ஏற்படுவதுடன் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அதே போல அவ்வப்போது சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக மேற்கு தாம்பரம், கோவிந்தராஜன் தெருவில் மின்கம்பிகளை மரக்கிளைகள் சூழ்ந்து பல மாதங்களாக இருக்கும் நிலையில், மின்வாரிய அதிகாரிகள் இதை கொள்வதே இல்லை.

நேற்று முன்தினம் இரவு ரங்கநாதபுரம் பகுதியில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு யாரும் வரவில்லை, மின் இணைப்பும் துண்டிக்கப்படவில்லை.

பின்னர் பொதுமக்கள் சார்பில் காந்தி சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு வந்த தாம்பரம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து, பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். மதிய நேரங்களில் அடிக்கடி மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதால் வீட்டில் குழந்தைகள், முதியோர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் உயர் மின்னழுத்தம் ஏற்படுவதால் வீடுகளில் உள்ள விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் பழுதாகிறது.

அவ்வப்போது பராமரிப்பு பணி என காலை முதல் மாலை வரை மின்தடை அறிவிக்கின்றனர். ஆனால், பணி செய்வதாக கூறி வரும் மின்வாரிய ஊழியர்கள் எந்த ஒரு பணியையும் முழுமையாக செய்வதாக தெரியவில்லை. அவ்வாறு அவர்கள் பணிகளை முழுமையாக செய்திருந்தால் இதுபோன்ற மின்தடை பிரச்னை ஏற்படாது. மின் பிரச்னைகள் குறித்து மின்வாரிய அலுவலகங்களுக்கு தொடர்புகொண்டால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அழைப்பை எடுப்பதே இல்லை. சில நேரங்களில் அழைப்பை எடுத்தாலும் அலட்சியமாக பதில் சொல்லி இணைப்பை உடனடியாக துண்டித்து விடுகின்றனர்.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் எங்கெங்கெல்லாம் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளில் மரக்கிளைகள், செடி கொடிகள் சூழ்ந்து இருக்கின்றதோ அவற்றை முழுமையாக அகற்றுவதோடு மின்கம்பங்களில் உடைந்த நிலையில் உள்ள சுவிட்ச்களை புதிதாக மாற்ற வேண்டும். எங்கெல்லாம் மின்கம்பங்கள் சேதமடைந்து இருக்கின்றதோ அவற்றை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்கள் ஆக மாற்ற வேண்டும்.

உயர் மின்னழுத்தம் ஏற்படுகின்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததோடு, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முறையாக இதுபோன்ற பராமரிப்பு பணிகளை செய்து வந்தால் மின்தடை என்பது நிச்சயம் இருக்கவே இருக்காது,’’ என்றனர்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகள்: பருவ மழைக்குள் சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: