கீழ்பவானியில் திறக்கப்பட்டு உபரிநீர் வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 10 நாளில் துவங்கும்: அமைச்சர் பேட்டி

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு அடுத்த 10 நாட்களில் உபரி நீர் வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் துவங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார். பின்னர் விவசாயிகளுடன், கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி விரைவாக திட்டத்தினை முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தி வருகிறார்.

கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டு, 10 அல்லது 15 நாட்களில் கசிவு நீர் கூடுதலாக வந்தால், அன்றைய தினமே அத்திக்கடவு-அவிநாசி திட்டம் திறப்பு விழா செய்யப்பட்டு, 1,045 குளங்களுக்கும் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படும். விவசாயிகளின் கோரிக்கைபடி, கூடுதலாக குளங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணமும், முதல்வரின் எண்ணமுமாக உள்ளது. அதற்கு தனி திட்டம் தான் போட வேண்டும். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையோ, விவசாய சங்க அமைப்போ எங்களிடம் கேட்டால் திட்டத்திற்கு உண்டான விளக்கத்தை அளிக்கிறோம். இது தான் உண்மையான நிலைமை. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

The post கீழ்பவானியில் திறக்கப்பட்டு உபரிநீர் வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 10 நாளில் துவங்கும்: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: