தகைசால் தமிழர் விருதிற்கு குமரிஅனந்தன் தேர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குகிறார்


சென்னை: தகைசால் தமிழர் விருதிற்கு குமரிஅனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதை சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் உத்தரவிட்டிருந்தார். இந்த விருதை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கான நடப்பாண்டு விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், காந்தி போரம் அமைப்பின் தலைவரும் இலக்கிய செல்வராக, இலக்கிய கடலாக, எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரிஅனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரிஅனந்தனுக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இலக்கியச் செல்வருமான குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழக அரசு உரிய நேரத்தில், உரிய விருதை வழங்கியிருக்கிறது. இதற்கு பரிந்துரை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வ நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

விருது பெறுவதில் மகிழ்ச்சி
தகைசால் தமிழர் விருது மற்றும் ₹10 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறித்து, குடியாத்தத்தில் குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘காமராஜரின் தொண்டனாகிய எனக்கு, காமராஜர் வழியை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து இந்த விருதை பெறுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

The post தகைசால் தமிழர் விருதிற்கு குமரிஅனந்தன் தேர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Related Stories: