பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது முறையாக தனியார் கம்பெனி நுழைவாயில் முன்பு போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வெள்ளி வாயல்சாவடி கிராமத்தில் தனியார் வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிவாயல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக தோட்டக்கலை, அலுவலகத்தை சுத்தம் செய்தல், உணவு வழங்கும் பகுதியில் பணி, உதவியாளர் பணி உள்ளிட்ட பணிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார் ரூ.12,000 மட்டும் சம்பளம் தருவதாக சம்பள உயர்வு பணி நிரந்தரம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் சார்பாக அப்பகுதி சேர்ந்த மைதிலி என்பவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தனியார் நிறுவன அதிகாரி சுதாகருக்கும் மைதிலிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தகாத வார்த்தைகளால் மைதிலியை பேசி பணியிலிருந்து சுதாகர் நிறுத்தி உள்ளார்.

இதனைக் கண்டித்தும் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை முன்வைத்து நேற்று மூன்றாவது முறையாக கம்பெனியின் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பெனி நிர்வாகம் சார்பில் எந்தவித பேச்சுவார்த்தை நடைபெறாததால் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகம் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தனியார் நிறுவனம் சார்பில் நிர்வாக அதிகாரிகள் கிருஷ்ணன், முத்துக்குமார், வெங்கடேசன், ஒப்பந்தக்காரர் இளங்கோ, மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக பெண்களை அவதூறாக பேசிய கம்பெனி நிர்வாகி சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 15 ஆண்டு காலமாக பணிபுரியும் ஒப்பந்ததாரர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நேற்று ஒப்பந்த தொழிலாளர் அனைவரும் பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது முறையாக தனியார் கம்பெனி நுழைவாயில் முன்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: