அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான சத்துணவு நிறுத்தம்

*சரமாரியாக கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

புதுச்சேரி : அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு அனைத்தும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏழை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம், சமூக வளர்ச்சியினை மேம்படுத்துதல், குழந்தை பராமரிப்பு, கருவுற்ற மகளிர், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம்பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் கல்வி அளித்து, குழந்தைகள் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மையங்கள் இயங்கி வருகிறது.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாநிலம் முழுவதும் 865 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக அங்கன்வாடி ஊழியர்களை புதுச்சேரி அரசு பணிநிரந்தரம் செய்ததோடு, மிகச்சிறப்பான முறையில் அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தி வந்தது. எந்த ஒரு அரசின் திட்டத்தையும் கடைக்கோடி வரை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த மையங்கள் செயல்பட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அனைத்தும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அங்கன்வாடிகளில் வழங்கப்பட்டு வந்த சத்துமாவு இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டபோது, நிதி பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் சத்துமாவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு ஆண்டினை கடந்தும் சத்துமாவு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த கேழ்வரகு புட்டு, கலவை சாதம், முட்டை, கொண்டை கடலை என அனைத்து உணவுகளும் நிறுத்தப்பட்டது. கடந்த 4 மாதமாக அங்கன்வாடிகளில் எந்த ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவு பொருட்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அதே நிதி பற்றாக்குறையை காரணம் காட்டியுள்ளனர். விரைவில்நிலைமை சரியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.

சத்துணவு வழங்கப்படாதது குறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்புவதால் பதில் சொல்ல முடியாமல் அங்கன்வாடி ஊழியர்கள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் மட்டும் அங்கன்வாடி மையங்களுக்கு வெறுமனே வந்து செல்கின்றனர். ஏழை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சத்தான உணவு வழங்குவதற்கு கூட நிதி பற்றாக்குறையை காரணம் காட்டுவதா? என்ற கேள்விஎழுந்துள்ளது.

இது குறித்து அங்கன்வாடி ஊழியர்களிடம் விசாரித்தபோது, சத்துமாவு, கொண்டைகடலை, எண்ணெய், கேழ்வரகு, முட்டை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அரிசி மட்டுமே அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படுகிறது. பிற பொருட்கள் இல்லாததால் அரிசியை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். எனவே அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உணவு பொருட்களை கொள்முதல் செய்து தர வேண்டும், என்றனர்.

மறந்துபோன ரங்கசாமி

ஊட்டச்சத்து உணவு முறை குறித்த கணக்கெடுப்பு பணியை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி, ஊட்டச்சத்து குறித்து நீண்ட விளக்கத்தை அளித்ததோடு, மாணவர்களுக்கு ரொட்டிப்பாலுடன் பழங்கள் வழங்க இருப்பதாகவும் மற்றும் சிறுதானிய திட்டத்தை விரிவுபடுத்துவோம், கூடுதலாக சுண்டலும் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எந்த உணவும் வழங்கப்படுவதில்லை என்பதை மறந்துவிட்டரா? எனவும் பொதுமக்கள் கேட்கின்றனர்.

அவரது துறை இல்லையென்றாலும், அனைத்து துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியது முதல்வரின் பொறுப்பாகும். குழந்தைகளுக்கு கூட சரியான சத்தான உணவு வழங்க முடியவில்லையென்றால் எதற்காக சம்மந்தப்பட்ட துறை இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான சத்துணவு நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: