நாகர்கோவில் : ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைக்கப்பட வேண்டும் . இதற்கான இடத்தை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் வழங்க, மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
900 க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக உள்ளனர். தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனையாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் அதிகம் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். பொதுமக்கள் தவிர, வழக்குகளில் கைதாகி நாகர்கோவில் சிறையில் இருக்கும் கைதிகள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகிறார்கள். இது மட்டுமின்றி அடி,தடி உள்ள குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்கள் உடல் நிலை சரியில்லை என கூறி, இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு இல்லாததால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சாதாரண வார்டுகளில் தான் கைதிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டி உள்ளது. இது பொதுமக்களுக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது.
நாகர்கோவிலில் உள்ள சிறை, மாவட்ட சிறைச்சாலையாக உள்ளது. இங்கு கொலை வழக்கு கைதிகள், குண்டர் சட்ட கைதிகள் கூட தற்போது அடைக்கப்படுகிறார்கள். இவர்களில் ரவுடிகளும் இருக்கிறார்கள். முன் விரோத அடி,தடி, கொலை வழக்கில் கைதானவர்களும் உண்டு. இவர்களில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் எதிரிகளால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இது மட்டுமின்றி, கைதிகள் தப்பி செல்லவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பாதுகாப்பு இருக்கும் போலீஸ் தான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டி உள்ளது. போலீசாருக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. இதுவே கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு இருந்தால், அந்த வார்டில் கைதிகளை அனுமதித்து தனியாக பாதுகாப்பு அளிக்க முடியும் என போலீசார் கூறி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைக்க காவல்துறை பரிந்துரையின் பேரில் அப்போதைய மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்த நடவடிக்கை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவமனையில் புகுந்து கைதிகள் கொலை சம்பவமும் நடந்துள்ளது. எனவே இது போன்ற சம்பவங்களை முன்னுதாரணமாக கொண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கைதிகளுக்கு தனி சிகிச்சை வார்டு அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.