மாவட்ட ஊர்காவல் படையில் முதன் முறையாக திருநங்கை சேர்ப்பு

 

ராமநாதபுரம், ஜூலை 12: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல் படைக்கு 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 27 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி உத்தரவை எஸ்பி சந்தீஷ் நேற்று வழங்கினார். இதில் மாவட்டத்தில் முதன் முறையாக மூன்றாம் பாலினத்தவரான திருநங்கை குந்தவை என்பவரும் ஊர்காவல் படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பணி உத்தரவை எஸ்பி வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் 125 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு எஸ்பி சந்தீஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் பேரிடர் மேலாண்மை கமாண்டோ பயிற்சியில் பங்கேற்று முதலிடம் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் திலீப்குமாருக்கும் சான்றிதழ் வழங்கி எஸ்பி பாராட்டினார். எஸ்பி கூறும்போது, மாவட்டத்தில் முதன் முறையாக திருநங்கை குந்தவை ஊர்க்காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவரைப் போன்று மூன்றாம் பாலினத்தவரும் சமூக நோக்குடன் பணியாற்ற வந்தால் ஊர்க்காவல் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். நமது மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி வந்துள்ளனர். மேலும் கோயில் திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஊர்க்காவல் படையினரின் பணி சிறப்பானது என தெரிவித்தார். இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி அருண், ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் மருத்துவர் ஜபருல்லா மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட ஊர்காவல் படையில் முதன் முறையாக திருநங்கை சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: