தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அக்டோபர் 29ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங், இன்று காலை தொடங்கிய 5 நிமிடத்தில் முடிந்தது. முக்கிய ரயில்கள் அனைத்தும் நிரம்பி, காத்திருப்போர் பட்டியலே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை, நடப்பாண்டு அக்டோபர் 31ம் தேதி வருகிறது. இப்பண்டிகையை சொந்த ஊர்களில் உற்சாகமாக கொண்டாடி மகிழ நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் செல்வது வழக்கம். இதனால், தீபாவளியையொட்டிய நாட்களில் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். ரயில்களை பொறுத்தளவில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே மேற்கொள்ளலாம் என்பதால் தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் புக்கிங் தற்போது நடந்து வருகிறது. வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வரும் நிலையில், அதற்கு முந்தைய திங்கட்கிழமைக்கான (அக்.28ம் தேதி) டிக்கெட் புக்கிங் நேற்று நடந்தது. அதில், சென்னையில் இருந்து கோவை மார்க்கத்திலும், மதுரை, திருநெல்வேலி மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில்களின் டிக்கெட் முதல் 10 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்தன. ஒரு சில ரயில்களில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் இருக்கைகள் உள்ளன. இந்நிலையில் தீபாவளிக்கு ஒருநாள் முன்பாக அதாவது செவ்வாய் கிழமைக்கான (அக்.29ம் தேதி) டிக்கெட் புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், வியாழக்கிழமை தீபாவளியை கொண்டாட செவ்வாய் கிழமையில் புறப்பட திட்டமிட்டுள்ள மக்கள் முண்டியடித்துக் கொண்டு இன்று காலை ரயில் டிக்கெட் முன்பதிவை மேற்கொண்டனர். சரியாக காலை 8 மணிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கியதும், செல்ல விரும்பிய ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

சேலத்தை பொறுத்தளவில், சேலம் ஜங்ஷன், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் காலை 6 மணிக்கே சில பயணிகள் வந்து காத்திருந்தனர். அவர்கள், காலை 8 மணிக்கு முதல் ஆளாக அக்டோபர் 29ம் தேதிக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு திரும்பினர். இதில், பெங்களூரில் இருந்து சேலம், நாமக்கல் வழியே நாகர்கோவிலுக்கு செல்லும் பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் புக்கிங் தொடங்கிய 3 நிமிடத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. அந்த ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 135ஐ கடந்துவிட்டது. காரணம், இந்த ரயிலுக்கு ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் அதிக பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்தனர். இதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும், கோவை, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் ரயில்களிலும் அக்டோபர் 29ம் தேதிக்கு முதல் 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டும் புக்கிங் ஆனது. அந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் நிலை வந்துள்ளது. சில ரயில்களில் காத்திருப்போர் பட்டியலே இல்லாத நிலை (ரிக்ரிட்) ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், ஏற்காடு, சேரன், நீலகிரி, மங்களூரு, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நிரம்பின. அதேபோல், கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியே திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், மும்பையில் இருந்து சேலம், நாமக்கல், வழியே செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முதல் 5 நிமிடத்தில் முடிந்தது. இனி நாளைய தினம் காலை 8 மணிக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதிக்கான (புதன்கிழமை) டிக்கெட் புக்கிங் நடக்கவுள்ளது.

 

The post தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல் appeared first on Dinakaran.

Related Stories: