ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு


சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, கொண்டக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற தொழிற்சாலையில், அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, பொன்னேரி சார் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாஹே தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை போக்குவரத்துத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை உட்பட 14 அரசு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அவசர கால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாஹே பேசுகையில், ‘‘இம்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அனைத்து அரசு துறையினர்களையும் தயார்படுத்த உதவுகிறது,’’ என்றார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கார்த்திகேயன் பேசுகையில், ‘‘பேரிடர் காலங்களில் ஒவ்வொரு அரசு துறைகளும் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்,’’ என்றார். மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் பேசுகையில், ‘‘இந்த அவசரகால ஒத்திகையின் போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் சுற்றுப்புற காற்றின் தர கண்காணிப்பு நடமாடும் வாகனம் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.
தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த துணை சுமாண்டன்ட் சுதாகர், ‘‘இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை பல்வேறு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 3 அவசரகால மருத்துவ மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், 9 அபாயகரமான தொழிற்சாலைகளின் புறவளாக அவசரகால கையேடு புத்தகத்தை பொன்னேரி சார் ஆட்சியர் வெளிவிட்டார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர்கள் இளங்கோவன், உட்பட துணை இயக்குநர்களும் கலந்துக்கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் ரிவையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முனைய மேலாளர் விஸ்வநாதன் நன்றியுரை ஆற்றினார்.

The post ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: