ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 75 ஆக உயர்வு

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக பதவி வகிக்க நியமிக்கப்படும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் வயது வரம்பை 70 வயதிலிருந்து 75 வயதாக உயர்த்தி பேரவையில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை பாதுகாக்கவும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வை பாதுகாக்கவும் 2021ல் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி ஆணையத்தின் தலைவர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான விவகாரங்களில் சிறப்பு அறிவு திறனுடைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சேர்ந்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவராக இருக்க வேண்டும். சட்டத்தின் வகைமுறைகளை திறம்பட நடைமுறைப்படுத்தவும் அனுபவம் வாய்ந்த மூத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சேவைகளை பயன்படுத்தவும், ஆணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பை 70லிருந்து 75 ஆக உயர்த்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் பேரவையில் நேற்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

The post ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 75 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: