பின்வாசல் நியமனம் இளைஞர்களை பாதிக்கும் சட்டவிரோத நியமனங்களை முறைப்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை: பின்வாசல் நியமனங்கள் வேலையில்லா இளைஞர்களை பாதிக்கும் என்றும், சட்டவிரோதமான நியமனங்களை முறைப்படுத்த முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவில் உள்ள தேவிகோடு கிராம பஞ்சாயத்தில், குடிநீர் வினியோக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், சேவியர் உள்ளிட்டோரை நியமித்து கடந்த 1997ல் பஞ்சாயத்து தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் நியமிக்கப்படாததால், அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க முடியாது.

இவர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று வாதிட்டார். அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்படாத பதவிகளில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை, முறைப்படுத்த முடியாது. தகுதியான விண்ணப்பதாரர்களின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற பின்வாசல் நியமனங்கள் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உத்தரவிட்டனர்.

The post பின்வாசல் நியமனம் இளைஞர்களை பாதிக்கும் சட்டவிரோத நியமனங்களை முறைப்படுத்த முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: