இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த இலக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

* பட்டுக்கோட்டை அண்ணாதுரை: பட்டுக்கோட்டை தொகுதி, ஆலாத்தூர் ஊராட்சி, முசிறி கைலாசநாதர் கோயிலுக்கு திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா?

* அமைச்சர் சேகர்பாபு : அங்கு ஏற்கனவே 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த திருக்கோயிலும் அதில் உள்ளது. ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திருக்கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்.

* அண்ணாதுரை: பட்டுக்கோட்டை தொகுதி காசாங்காடு முத்துமாரியம்மன் கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டப்படுமா?

* அமைச்சர் சேகர்பாபு : அது சிறிய கோயிலாகும். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தாமரைங்கோட்டையில் கண்டேஸ்வரசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3.60 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவுற்றிருக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.350 கோடி செலவில் 97 திருமண மண்டபங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது.

* மதுரவாயல் கணபதி : தமிழ்நாடு முதல்வர், ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு விளையாட்டுத்திடல் என்று அறிவிப்பின்படி மதுரவாயல் தொகுதியில் விளையாட்டுத் திடல் அமைப்பதற்கு இடம் இல்லாத காரணத்தினால் மதுரவாயல் மார்க்கசகாய ஈஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டுத்திடலை அமைக்க இடம் ஒதுக்கி தரப்படுமா?

* அமைச்சர் சேகர்பாபு : இந்த ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டிற்கு மேலான திருக்கோயிலின் இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை பல துறைகளுக்கு தற்போது வாடகைக்கு வழங்கி வருகிறோம். மக்கள் பயன்பாட்டிற்கு என்று வருகின்ற போது உடனடியாக அதை தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். அந்த வகையில் உறுப்பினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

* கோவை தெற்கு வானதி சீனிவாசன்: இந்த முறை அறநிலையத்துறை மானிய கோரிக்கையிலே கோவை தெற்கு தொகுதியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு தங்கத்தேர் அறிவித்திருக்கிறார்கள். அதற்காக எங்களுடைய நன்றி. அதேபோல ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் புளியகுளம், விநாயகர் கோயில் இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்.

* அமைச்சர் சேகர்பாபு : இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 8,962 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மாநில வல்லுநர் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாட்டத்தில் இருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளோடு ஒப்பிடுகையில் உறுப்பினர் தொகுதியில் ரூ.12 கோடி அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் கோரிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றித் தரப்படும்.

The post இந்த ஆண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த இலக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: