பிரதமர் மோடி வருவாரா.. மாட்டாரா..? ரயில்வே அதிகாரிகள், பாஜ நிர்வாகிகள் குழப்பம்

சென்னை: பிரதமர் மோடி வருவரா..? மாட்டாரா..? என ரயில்வே அதிகாரிகள், பாஜ நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கின்றனர். வந்தே பாரத் ரயில் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி தமிழ்நாடுக்கு வருவார் என கூறப்பட்டது. அதாவது, எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு என 2 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவார் என கூறப்பட்டிருந்தது. அப்போது மோடியின் தமிழக பயணம் அதிகம் பேசப்பட்டது.

அந்த நேரத்தில் தமிழக பாஜவில் உட்கட்சி மோதல்கள் வெடித்திருந்ததால் பாஜவினர் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. மறுபக்கம் பிரதமரின் வருகைக்காக ரயில்வே அதிகாரிகள் இரவு பகல் என அயராது பணியாற்றி வந்தனர். குறிப்பாக, மேடை எங்கு அமைப்பது, விழாவிற்கு யாரை அனுமதிப்பது, அழைப்பிதழ் அச்சடிப்பு, நடைமேடையை சுத்தம் செய்வது என தூய்மை பணியாளர்கள் முதல் ரயில்வே அதிகாரிகள் வரை ஓய்வில்லாமல் ஒரு வாரம் உழைத்தனர்.

ஆனால் பிரதமரின் வருகை ரத்தானதால் சில அதிகாரிகள் கோபத்தில் இரண்டு, மூன்று நாட்கள் விடுமுறைக்கு சென்று விட்டனர்.  இதுமட்டுமல்லாமல், விழாவிற்கு அச்சடிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட அழைப்பிதழ் வீணானது. அதேபோல், வந்தே பாரத் ரயில் சோதனைக்காக ரயில்வே அதிகாரிகள், மற்ற ரயில்களை ஆங்காங்கே நிறுத்தி ரயில் பயணிகளை படாதபாடு படுத்திவிட்டனர்.

இந்நிலையில், தற்போது வரை இந்த 2 வந்தே பாரத் ரயில்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்கிற தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கே தெரியாததால் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இந்த 2 ரயில்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அறிமுகப்படுத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் பாஜவினரும், ரயில்வே அதிகாரிகளும் பிரதமர் மோடி வருவரா..? மாட்டாரா..? என குழம்பி போய் உள்ளனர்.

The post பிரதமர் மோடி வருவாரா.. மாட்டாரா..? ரயில்வே அதிகாரிகள், பாஜ நிர்வாகிகள் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: