செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது

சென்னை: செங்கல்பட்டில் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி சத்யா, வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.பல்லாவரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சுதாகர், பாஜ மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ளார். இவர், கடந்த 27ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார். இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஏ-பிளஸ் ரவுடி சத்யா, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜ பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்று இரவு தடபுடலாக மது விருந்து நடைபெற்றுள்ளது. அப்போது பிரபல ரவுடி சத்யா, தனது கூட்டாளிகளுடன் சொகுசு காரில் ஈசிஆர் சாலையில் அதிகாலையில் வலம் வந்துள்ளார். பட்டிப்புலம்-தேவனேரி இடையே மாமல்லபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சத்யாவின் காரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது சத்யா தனது காரில் நவீன துப்பாக்கி, 5 தோட்டாக்கள், வீச்சரிவாள் வைத்திருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.

இதனை அடுத்து போலீசார் சத்யாவை சுற்றி வளைத்து மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது ரவுடி சத்யா தன்னுடன் பால் பாண்டியன், மாரிமுத்து ஆகிய கூட்டாளிகள் வந்ததாகவும், அவர்கள் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தார். அனுமதி இன்றி நவீன ரகத் துப்பாக்கியை எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, பாஜ மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸ் சுதாகர் என்பவர் எனக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததாக சத்யா கூறினார்.

இதையடுத்து அலெக்ஸ் சுதாகர் மீது தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்ததாக கூறி மாமல்லபுரம் போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பிரபல ரவுடி சத்யாவை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு பைபாஸ் சாலை அருகே மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சத்யா, தனது காரில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து தனிப்படை எஸ்ஐ ரஞ்சித் குமாரின் கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

இதைப் பார்த்ததும் செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ் கணேஷ், உடனே ரவுடி சத்யாவின் காலை பார்த்து குறிவைத்து சுட்டார். குண்டடி பட்ட சத்யா, கீழே விழுந்தவுடன் போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இதையடுத்து, அப்பகுதியில் மலையில் பதுங்கியிருந்த மாரிமுத்து மற்றும் பால்பாண்டியன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு இருவரும் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் கார்த்திக் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். இதன் தொடர்ச்சியாக, ரவுடி சத்யாவுக்கு நவீன துப்பாக்கி மற்றும் ஆயுதம் வழங்கிய வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ரவுடி சத்யா மற்றும் பால் பாண்டியன், மாரிமுத்து ஆகிய 3 பேர் மீதும் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது ரவுடி சீர்காழி சத்யா ஏதற்காக துப்பாக்கியுடன் வலம் வந்தார், பாஜ பிரமுகர்கள் எதற்காக ஒன்று கூடினர், சதி திட்டம் தீட்டினார்களா என்பது குறித்து தெரியவரும். இதில் பாஜ முக்கியப் புள்ளிகள் பலரும் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

The post செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: