தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்தம் கள்ளச்சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை: ரூ.10 லட்சம் அபராதம் சொத்துக்கள் பறிமுதல்

சென்னை: கள்ளச்சாராயத்தால் மரணம் ஏற்பட்டால் அதனை தயாரித்தவர், விற்பனை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கும் மதுவிலக்கு சட்டத் திருத்தம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்ய சட்டத் திருத்த மசோதாவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் (1937ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம்) கூறப்பட்டுள்ள விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, உடைமை, உற்பத்தி, குப்பியில் அடைத்தல் மற்றும் அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு பல்வேறு தண்டனைகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் கள்ளச்சாராயம் தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை அத்தகைய குற்றங்களை களைவதற்கும், அத்தகைய குற்றங்களில் வழக்கமாக ஈடுபடும் குற்றவாளிகளை தடுப்பதற்கும் போதுமானதாக இல்லை.

தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியமானது. எனினும் இந்த நோக்கத்தை அடைவதற்காக பெரும்பாலும் சட்டவிரோதமான கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படும் குடிதன்மை இழந்த எரிசாராயம் மற்றும் மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான குற்றங்களுக்காக கூறப்பட்டுள்ள சட்டத்தில் வழங்கப்படும் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

விலைமதிப்பற்ற மனித உயிரிழப்பினை விளைவிக்கும் கள்ளச்சாராயங்களை உற்பத்தி செய்தல், உடமையில் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றில் வழக்கமாக ஈடுபடும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடுமையான தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, தற்போதுள்ள சட்டத்தில் வழங்கப்படும் சிறை தண்டனையின் கால அளவு மற்றும் அபராத தொகையினை கணிசமாக அதிகரிக்க திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் நடத்தும் இடத்தின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளராக அல்லது அவரது கட்டுப்பாட்டில் கள்ளச்சாராயம் இருந்தால் அந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை தரப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மாநில அரசால் குறிப்பிடப்படும் மதுபானத்தின் அனுமதியின்றி போக்குவரத்து, வைத்திருத்தல், அனுமதி இல்லாத அதே இடத்தில் மது அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டையும் சேர்த்தோ விதிக்கப்படும்.

மனிதப் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்ட எரிசாராயத்தை விற்பனை செய்தால் 1 முதல் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் தயாரித்தால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையும் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் தயாரித்தல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான குற்றங்களை முழுவதுமாக தீர்க்க வேண்டும். எனவே, இந்த கள்ளச்சாராய குற்றங்களில் வழக்கமாக ஈடுபடும் நபர்களை எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுக்க ஜாமீன் தொகையை கணிசமான அளவுக்கு அதிகரிப்பதற்கு நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபட்டு மரணம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும்,ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இந்தக் குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒருவரை அந்த பகுதியிலிருந்து நீக்கம் செய்வதற்கோ அல்லது வேறு மாவட்டத்திற்கு மாற்றவோ மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தின் முன் விண்ணப்பம் செய்யும் வகையில் சட்டத்தின் பிரிவில் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பிற கட்சி உறுப்பினர்கள் மதுவிலக்கு திருத்த சட்டத்தில் இன்னும் பல திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். ஜாமீனில் வெளிவராத வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கள்ளச்சாராய குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த சட்டத்தை மேலும் வலுவாக்க வேண்டும். குற்றவாளிகள் பிணையில் வெளியே வர முடியாத வகையிலும், பிணையில் வெளிவரும் நபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார் என்று நீதிமன்றத்தால் கருதும் வகையிலும், பிணை குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். மகாராஷ்டிர மாநிலத்தில் இது போன்ற திருத்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, திருத்தம் செய்வதற்கான சரத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்றார். விவாதத்தின்போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர்களை குற்றவாளிகளாக சேர்ப்பது என்பதை எல்லாம் ஆய்வு செய்துதான் முடிவெடுக்க முடியுமே தவிர உடனே செய்ய முடியாது என்றார். இதைத் தொடர்ந்து சட்டமுன்வடிவு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

The post தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்தம் கள்ளச்சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை: ரூ.10 லட்சம் அபராதம் சொத்துக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: