9 நாள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகள்: போலீஸ் மானியக்கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழக காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். அத்துடன் 9 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. தமிழக சட்டப் பேரவை கூட்டம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, நிறைவேற்றுவதற்காக கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் இரங்கல் தீர்மானத்துடன் அவை முடிந்தது. பின்னர் 21, 22 மற்றும் 24ம் தேதி முதல் 29ம் தேதி (நேற்று) வரை 9 நாட்கள் காலை மற்றும் மாலையிலும் பேரவை கூட்டம் நடைபெற்றது.

பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய  துறைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பின்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: புதிய காவல் நிலையங்கள், உட்கோட்டங்கள், பிரிவுகள் உருவாக்குதல் மற்றும் மறுவரையறை செய்யப்படும். அதன்படி, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள சி-3 மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து படப்பை காவல் நிலையம் ரூ.1.70 கோடியில் புதிதாக உருவாக்கப்படும்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக திருப்பரங்குன்றம் கோயிலுக்கென காவல் நிலையம் உருவாக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து ஆதமங்கலம் புதூரில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ஏற்காடு போக்குவரத்து காவல் நிலையம் ரூ.70 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூ.1.91 கோடி செலவில் உருவாக்கப்படும்.

ஆவடி காவல் ஆணையரகம் சமீபத்தில் பிரிக்கப்பட்டதால் அங்கே ‘கியூ’ பிரிவின் அலகு ரூ89 லட்சம் செலவில் புதியதாக உருவாக்கப்படும்.  சென்னை காவல்துறை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலிக்கவும், முக்கிய நிகழ்வுகளின் போதும், சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவல் இடையே சிறந்த ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவும், தற்போதைய சென்னை போக்குவரத்துக் காவல் எல்லைகள் மறுசீரமைக்கப்படும். ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக பொன்னேரி சரகம் ரூ41 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் மூன்று அலகுகள் ரூ.2.38 கோடி செலவில் உருவாக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையம், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். தற்போதைய காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை-I இன் பதவி காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (வடக்கு மண்டலம்) எனவும்,

காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை-IIன் பதவி காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (தெற்கு மண்டலம்) எனவும், காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை-IIIன் பதவி காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (மத்திய மண்டலம்) எனவும், காவல் கண்காணிப்பாளர், இணையவழி குற்றம் பதவி காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (மேற்கு மண்டலம் மற்றும் இணையவழி குற்றப் பிரிவு) எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும்.

பொருளாதார குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு 1982ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 14-ல் திருத்தம் செய்யப்படும். சென்னை கிண்டி காவல் நிலைய கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையம் ரூ23 லட்சம் செலவில் அமைக்கப்படும். சென்னை மாநகரம், கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு ரூ.3.99 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு ரூ.1.48 கோடி செலவில் கட்டப்படும்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், வி-6 கொளத்தூர் காவல் நிலையம் மற்றும் கே-5 பெரவள்ளூர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு புதிதாக ஒருங்கிணைந்த கட்டிடம் ரூ.5 கோடி செலவில் கட்டப்படும்.  சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகம் தற்போது தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் வளாகத்தில் பாதுகாப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்காக கட்டுப்பாட்டு அறை கட்டிடம் ரூ.1.13 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்.

தமிழ்நாடு காவலர்களுக்காக உருவாக்கப்பட்ட காவல் அங்காடிகளில் 12 மாவட்ட காவல் அங்காடிகளுக்கான புதிய கட்டிடம் கட்டப்படும். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் குற்றப்பிரிவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் வைத்திட சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களில் புதிய கிடங்கு ரூ.3.84 கோடி செலவில் அமைக்கப்படும். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் மற்றும் விழா மேடை ரூ.1.47 கோடி செலவில் கட்டப்படும்.

காவல்துறைக்கென கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், கட்டிடங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றின் சிறப்பு பழுது பார்ப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நிதி ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். காவல்துறையின் பயன்பாட்டிற்கென 300 புதிய ஈப்புகள் ரூ.31.50 கோடி செலவில் வழங்கப்படும். பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு ஆளிநர்களை திரட்டவும், அழைத்துச்செல்லவும், வேன்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டு 25 புதிய வேன்கள் ரூ.5.25 கோடி செலவில் வழங்கப்படும்.

பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பணிகளுக்காக 15 புதிய பேருந்துகள் ரூ.4.5 கோடி செலவில் வழங்கப்படும். காவல் துறை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென 500 புதிய இரு சக்கர வாகனங்கள் ரூ.5.50 கோடி செலவில் வழங்கப்படும். கலவரத் தடுப்புப் பணிக்காக சிறப்பு வாகனங்கள் ரூ.4.31 கோடியில் வழங்கப்படும். சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கென 4 நவீன ரக மீட்பு வாகனங்கள் ரூ.2.06 கோடியில் வழங்கப்படும்.

தானியங்கி பதிவு எண்ணை பதிவு செய்யும் கேமராக்கள் உட்பட வாகனங்களை எண்ணி வகைப்படுத்தும் தானியங்கி கருவிகள் ரூ.5 கோடி செலவில் நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும். சென்னை மாநகரக் காவல்துறையிலுள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் பயன்படுத்திடத் தேவையான புதிய கருவிகள் ரூ.5.90 கோடி செலவில் வாங்கப்படும். ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு தகவல் தொடர்பு கருவிகள் ரூ.10.60 கோடி செலவில் வாங்கப்படும்.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் கலவரத்தை அடக்கப் பயன்படும் உபகரணங்கள் படிப்படியாக வழங்கப்படும். இந்த ஆண்டு 4000 எண்ணிக்கையில் வழங்கப்படும். மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் ரூ.4.64 கோடி செலவில் செயல்படுத்தப்படும். காவல் சுருக்கெழுத்துக் கூட அறிக்கையாளர்களுக்கு 136 மடிக் கணினிகள் தலா ஒரு மடிக் கணினி ஹெட் போனுடன் ரூ.82 லட்சம் செலவில் வழங்கப்படும். சென்னை காவல் ஆணையரகத்திற்கு துணை ஆணையாளர், நலன் மற்றும் எஸ்டேட் பதவி புதிதாக உருவாக்கப்படும். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் 5 சட்ட ஆலோசகர் பதவிகள் உருவாக்கப்படும்.

இணையதள குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு நிறுவன வல்லுநர்கள் ரூ.1 கோடி செலவில் ஈடுபடுத்தப்படுவார்கள். சென்னை காவல் ஆணையரக அலுவலகத்தில் அரசு துணை செயலாளர் நிலையில் நிதி கட்டுப்பாட்டாளர் பதவி ஒன்று புதிதாக உருவாக்கப்படும். சென்னை காவலில் ஊர்க்காவல் படையின் ஒப்பளிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தில் ஒரு முதன்மை நிர்வாக அதிகாரி பணியிடம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடல் ஊனமோ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்படுவதுடன், சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகையை உயர்த்தி வழங்கப்படும். டிஜிட்டல் சவால்களை சமாளிக்கவும், காவல்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை காவல் துறையினரே தனித்து மேற்கொள்ள சிறப்புப் பயிற்சி வழங்க ரூ.5 கோடி செலவில் கூட்டு நிதியம் உருவாக்கப்படும்.

சென்னை காவல்துறைக்கு புதிய இணைய முகப்பு உருவாக்கப்படும். சென்னை காவலில் பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்.  அரசு மற்றும் தனியார் நிதி உதவி மூலம் மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள உட்சுற்று தொலைக்காட்சி கேமராக்களின் பராமரிப்புச் செலவிற்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படும். மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் போதைப் பொருட்களை கண்டறிய 35 மோப்ப நாய்கள் வாங்கப்படும். புவியியல் தகவல் முறைமை அடிப்படையில், குற்ற நிகழ்விடங்களை வரைபடுத்தும் திட்டம் மாநிலம் முழுவதற்கும் விரிவாக்கப்படும்.

புவியியல் தகவல் முறைமை அடிப்படையில் குற்றங்கள் மற்றும் குற்ற நிகழ்விடங்களை ஆய்வு செய்யும் முறை தற்போது சென்னை மாநகர காவலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனி அது மாநிலம் முழுவதும் தமிழ்நாடு காவல்துறைக்காக தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் விரிவாக்கப்படும். இவ்வாறு 100 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

* கிளாம்பாக்கத்தில் ரூ.2.53 கோடியில் போக்குவரத்து காவல் நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது,’ தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் ஆகிய இரண்டு இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ரூ.73 லட்சம் செலவில் புதிதாக உருவாக்கப்படும். கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் உள்ள மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதால் கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து காவல் நிலையம் ரூ.2.53 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்படும்’ என்றார்.

* கொளத்தூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது,’ சென்னை காவல் சரகம் ஒவ்வொன்றிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், ஒரு மாநகராட்சி மண்டலம் மற்றும் 9 வார்டுகளுடன் அதிக மக்கள் தொகை கொண்ட சரகமாக கொளத்தூர் சரகம் இருப்பதால் அங்கு ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ரூ.37 லட்சம் செலவில் புதிதாக உருவாக்கப்படும்’ என்றார்.

* ஊர்க்காவல் படையினருக்கு இழப்பீடு நிதி உயர்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது,’ ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்’ என்றார்.

The post 9 நாள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகள்: போலீஸ் மானியக்கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: